ஆக்கிரமிக்கப்பட்ட மைதானத்தை மீட்டு தரக்கோரி இந்து மக்கள் கட்சியினர் மனு
ஆக்கிரமிக்கப்பட்ட மைதானத்தை மீட்டு தரக்கோரி விளையாட்டு உபகரணங்களுடன் வந்து இந்து மக்கள் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். அவரிடம், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதன்படி இந்து மக்கள் கட்சியின் (தமிழகம்) மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் பிரபு தலைமையில் நிர்வாகிகள் கையில் விளையாட்டு உபகரணங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், புதிய கலெக்டர் அலுவலக கட்டி டத்தின் முன் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
கோவை மாநகராட்சி 64–வது வார்டு சிங்காநல்லூர் உழவர் சந்தையின் பின்புறம் விளையாட்டு மைதானம் உள்ளது. தற்போது அது சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், மாநகராட்சி தெருவிளக்கு கம்பங்களை போட்டு வைக்கும் இடமாகவும் மாறப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட இடமின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, ஆக்கிரமிப்பு கள் மற்றும் அங்கு வளர்ந்து இருக்கும் புதர்களை அகற்றி விளையாட்டு மைதானத்தை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பட்டா வழங்க வேண்டும்அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத்தலைவர் சி.எம்.ஸ்டீபன் ராஜ் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களுக்கு பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் கொடுப்பது போல், தொற்று நோய்களுக்கு ஹோமியோபதி பாரம்பரிய மூலிகை மருந்துகளை பள்ளி குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சிங்காநல்லூர் திருச்சி ரோடு, அண்ணாநகரை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலக வளாகத் தில் அமர்ந்து திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், நாங்கள் அண்ணாநகரில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு பட்டா வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இந்தநிலையில் நாங்கள் குடியிருக்கும் பகுதிகளை 21 நாட்களுக் குள் காலி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு சொந்தமாக வீடுகள் கிடையாது. எனவே, எங்களுக்கு பட்டா வழங்கி, காலி செய்ய வேண்டும் என்ற அறிவிப்பினை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மடியேந்தி பிச்சைகோவை சின்னமத்தம்பாளையத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள், மடியேந்தி பிச்சை எடுப்பது போல் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பிளிச்சி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 250–க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் பணியாற்றி வந்தோம். எங்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கப்பட வில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், ஆறுகள், ஓடைகள், குளங்கள் ஆகியவற்றில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றுவதற்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை. எனவே அனைத்து அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கூட்டம் ஒன்றை கூட்டி அரசு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், இன்று (செவ்வாய்க்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சில அமைப்பினர் காதலர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். எனவே, காதலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.