மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு 4 மாதத்துக்குள் பணியிட மாறுதல் தொடக்க கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு


மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு 4 மாதத்துக்குள் பணியிட மாறுதல் தொடக்க கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Feb 2017 3:00 AM IST (Updated: 14 Feb 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு 4 மாதத்துக்குள் பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்

திருச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்புதூர் தொடக்கப்பள்ளியில் இடைநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.

நான் வசிக்கும் ஊரில் இருந்து பள்ளிக்கு தினமும் 130 கிலோ மீட்டர் தூரம் சென்று வருகிறேன். அதிக தூரம் பயணம் செய்வதால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் துறையூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏதாவது ஒரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குனர், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஆகியோரிடம் விண்ணப்பித்தேன்.

பணிமாறுதல் வழங்க மறுப்பு

ஆனால் துறையூர் யூனியனில் உள்ள பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இல்லை என்று கூறி, என்னுடைய விண்ணப்பத்தை நிராகரித்து விட்டனர். எனவே அவர்களது உத்தரவை ரத்து செய்து எனக்கு பணியிட மாறுதல் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்பு விசாரணைக்கு வந்தது.

4 மாதத்துக்குள் பணியிட மாற்றம்

முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

இந்திய அரசியலமைப்பு சட்டம், மாற்றுத்திறனாளிகள் சட்டம், சம உரிமைச்சட்டம் உள்பட அனைத்து சட்டமும் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறுகிறது. அந்த அடிப்படையில் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பது நியாயமல்ல. எனவே மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து 4 மாதத்துக்குள் பணியிட மாற்றம் வழங்க வேண்டும். தேவைப்பட்டால் பணியிடத்தை உருவாக்க வேண்டும். அல்லது பரஸ்பர இடமாறுதல் அடிப்படையில் பணியிட மாற்றம் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story