பெண் தாதா போல சசிகலா செயல்படுகிறார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
சசிகலா பெண் தாதா போல செயல்படுகிறார் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பெண் தாதாஅதிக அளவில் எம்.எல்.ஏ.க்கள் பலம் இருப்பதாக கூறும் சசிகலாவின் மீது ஏகப்பட்ட வழக்குகள், குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒரு ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக தீர்ப்பு வர இருக்கிறது. ஏற்கனவே கீழமை கோர்ட்டில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலுக்கு சென்றவர்.
அதே வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வர இருக்கிறது. எனவே தீர்ப்புக்கு பின்னர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பது தொடர்பாக கவர்னர் முடிவு செய்யலாம்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ஒரு பெண் தாதாவைப்போல செயல்பட்டு வருகிறார். 90 எம்.எல்.ஏ.க்களை அவர் சிறைபிடித்து வைத்திருப்பதுடன், குண்டர்களை விட்டு மிரட்டுகிறார்.
பத்திரிகையாளர்களை குண்டர்களை வைத்து தாக்குவது, செல்போன்களை பிடுங்கி வீசுவதும், கேமராவை எட்டி உதைப்பதுமாக பல மோசமான செயல்கள் நடந்து வருகிறது. அவர் பேசும்போதும் மிரட்டும் தோரணையில் பேசுவதை பார்க்கும்போதே அவர் பெண் தாதாவாக மாறிவிட்டது தெரிகிறது.
எம்.எல்.ஏ.க்களை விடுவிக்க வேண்டும்காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் தலையிடாது. ஆனால் 90 எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து வைத்து அவர்களை குண்டர்கள் வைத்து மிரட்டுவதை ஏற்க முடியாது. எனவே சிறைபிடித்து வைக்கப்பட்டு உள்ள எம்.எல்.ஏ.க்களை சசிகலா பிடியில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசு கூறும் கருத்துகள் அவரது சொந்த கருத்தாகும். நான், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், முக்கிய தலைவர்கள் மணிசங்கர் அய்யர், ராமசாமி, குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, ஜெயக்குமார், செல்லக்குமார், எங்கள் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி மற்றும் தமிழக பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் ஆகியோரிடம் பேசும்போது, யாருக்கும் ஆதரவு இல்லை. தி.மு.க. எடுக்கும் நிலைப்பாட்டுக்கு ஆதரவு என்றே முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எனவே நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். சசிகலாவுக்கும் ஆதரவு இல்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவு இல்லை.
சிங்கம்சசிகலா தன்னை சிங்கம் என்றோ வேறு எந்த விலங்கின் பெயரிலோ அழைத்துக்கொள்ளட்டும். அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கே.ஏ.செங்கோட்டையன் முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, எனக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தால், எனது மாவட்டக்காரர், நண்பர் என்ற முறையில் அவருக்குத்தான் வாக்களிப்பேன்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.