முதல்-அமைச்சர் வீட்டுக்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த சப்-இன்ஸ்பெக்டரால் பரபரப்பு


முதல்-அமைச்சர் வீட்டுக்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த சப்-இன்ஸ்பெக்டரால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Feb 2017 2:49 AM IST (Updated: 14 Feb 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த திருமுடிவாக்கத்தில் வசித்து வருபவர் எம்.உமாபதி.

சென்னை,

சென்னையை அடுத்த திருமுடிவாக்கத்தில் வசித்து வருபவர் எம்.உமாபதி. இவர், சென்னை குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று மாலை அடையாறில் உள்ள முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு கையில் ஒரு கடிதத்துடன் வந்தார்.

அந்த கடிதத்தில், ‘நான் 20.2.1986-ம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வருகிறேன். இதுநாள்வரை எந்தவொரு தண்டனையும் இல்லாமல் பணிபுரிந்து வருகிறேன். தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்துவிட்டதில் இருந்து எனக்கு மனவருத்தமாக இருக்கிறது. அதனால் என்னுடைய பணியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதை அறிந்த உயர் அதிகாரிகள், உடனே கடிதத்துடன் வந்த உமாபதியை தடுத்து நிறுத்தி முதல்-அமைச்சரை பார்க்க அனுமதிக்கவிடாமல் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக உமாபதி, நிருபர்களிடம் கூறுகையில், ‘ஜெயலலிதா இறந்தபிறகு மனவருத்தத்தில் இருப்பதால் என்னுடைய ராஜினாமா கடிதத்தை சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனரை சந்தித்து கொடுக்க முயற்சித்தேன். ஆனால், அவர் அங்கு இல்லாததால், முதல்-அமைச்சரை சந்தித்து கடிதத்தை கொடுக்க வந்தேன்’ என்றார். 

Next Story