எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து இருப்பது கேலிக்கூத்து சீமான் பேட்டி
எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கடந்த 2010–ம் ஆண்டு தமிழ் பெண்களை பற்றி இழிவாக பேசியதாக கூறி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டை தாக்கிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஆஜராவதற்காக நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 14 பேரும் திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு வந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், வருகிற ஏப்ரல் மாதம் 17–ந்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சீமான், நிருபர்களிடம் கூறியதாவது:–
ஓய்வெடுத்து வருவது சரியல்லதமிழ்நாட்டில் மக்கள் விருப்பம் ஒன்றாக உள்ளது. ஆனால் நடப்பது வேறு ஒன்றாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். விவசாயிகள் சாவு, மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு போன்ற பிரச்சினைகளுக்கு ஒன்று கூடி குரல் கொடுக்காத எம்.எல்.ஏ.க்கள் தற்போது பதவிக்காக 10 நாட்களாக ஓய்வெடுத்து வருகிறோம் என கூறி வருகிறார்கள்.
தொகுதிக்கு சென்று வேலை செய்யாமல் ஓய்வெடுத்து வருவது சரியல்ல. தனக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக கூறி வரும் சசிகலா, பின்னர் ஏன்? அவர்களை அடைத்து வைத்து உள்ளார்.
கேலிக்கூத்துதற்போது முதல்–அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வமே தொடர்ந்து முதல்–அமைச்சராக இருக்கலாம் என்பது எனது கருத்து. எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து இருக்கும் காட்சிகளை தெலுங்கு படத்தில்தான் பார்த்து இருப்போம். தற்போது அந்த நிலைமை தமிழ்நாட்டில் நடைபெற்று வருவது கேலிக்கூத்தாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.