குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள்


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள்
x
தினத்தந்தி 14 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

கலெக்டரிடம் மனு

பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளப்பட்டியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் கூறியதாவது:- வெள்ளாளப்பட்டியில் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் தினசரி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதேபோல் காவிரி குடிநீரும் 10 நாட்களுக்கு ஒருமுறை குறைந்த அளவில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டதால், முறையாக தண்ணீர் வினியோகம் செய்வது இல்லை. இதனால் கூலிவேலைக்கு செல்லும் நாங்கள் சுமார் 3 கி.மீட்டர் தூரம் சென்று விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பரபரப்பு

இதேபோல் திருச்செங்கோடு அருகே உள்ள கருமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்மாங்குட்டை பகுதியை சேர்ந்த பெண்களும் நேற்று காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்து குடிநீர் பிரச்சினை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் தினசரி 2 குடம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி இரு கிராமமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story