செய்துங்கநல்லூரில் மாடு முட்டி இறந்தவரது குடும்பத்துக்கு நிவாரண உதவி கேட்டு சாலைமறியல்


செய்துங்கநல்லூரில் மாடு முட்டி இறந்தவரது குடும்பத்துக்கு நிவாரண உதவி கேட்டு சாலைமறியல்
x
தினத்தந்தி 14 Feb 2017 4:30 AM IST (Updated: 14 Feb 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

மாடு முட்டி இறந்தவரது குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி, செய்துங்கநல்லூரில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம்,


மாடு முட்டியதில் சாவு

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் திருமலை நம்பி கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. அப்போது பந்தயத்தில் பங்கேற்ற ஒரு மாட்டு வண்டி, வேடிக்கை பார்த்த பொதுமக்கள் கூட்டத்தில் பாய்ந்தது.

அப்போது மாடு முட்டி தள்ளியதில் பலத்த காயம் அடைந்த கீழ நாட்டார்குளத்தைச் சேர்ந்த விவசாயி அந்தோணியை (வயது 48) பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாட்டு வண்டியை ஓட்டி வந்த ராஜ் பாண்டியன் மீது செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சாலைமறியல்

இதற்கிடையே இறந்த அந்தோணியின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் செய்துங்கநல்லூர் இந்தியன் வங்கி முன்பு நேற்று காலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாதவன் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

சமாதான பேச்சுவார்த்தை

பின்னர் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வ பிரசாத் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இறந்த அந்தோணியின் உடலை குடும்பத்தினர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வாங்கி சென்றனர். இறந்த அந்தோணிக்கு பத்மினி என்ற மனைவியும், மேரி என்ற மகளும், இம்மானுவேல், ஆகாஷ் ஆகிய 2 மகள்களும் உள்ளனர். 

Next Story