முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி ஆதரவு


முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி ஆதரவு
x
தினத்தந்தி 14 Feb 2017 4:30 AM IST (Updated: 14 Feb 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சேலம்,


பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் பிரிந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற பரபரப்பான சூழ்நிலையில் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க.நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி சேலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விஜயலட்சுமி பழனிசாமி, சென்னையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

பேட்டி

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை ஆரம்பித்தபோது அவர் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அந்த சமயத்தில் எனது சகோதரர் பூலாவரி சுகுமாரும், வத்தலகுண்டு ஆறுமுகம் உள்ளிட்டோர் உயிர் தியாகம் செய்த வரலாறு இருக்கிறது. பல தொண்டர்களின் ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க. இதை அழிந்து போக விடமாட்டோம்.

அதேமாதிரி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் பல்வேறு இன்னல்கள், சோதனைகளுக்கு உள்ளானார். அவர் மறைவுக்கு பின் அ.தி.மு.க.வை யார் வழிநடத்தி செல்வது என தொண்டர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். கட்சிக்கு பல்வேறு சோதனைகள் வந்த போதெல்லாம் முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தை தான் ஜெயலலிதா முன்மொழிந்தார். வேறு யாரையும் அவர் நம்பவில்லை.

மக்கள் மத்தியில் ஆதரவு

மக்கள் மத்தியிலும், அ.தி.மு.க.தொண்டர்கள் மத்தியிலும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தான் ஆதரவு உள்ளது. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி செல்லும் தகுதி அவருக்கு உள்ளது. மிகவும் எளிமையாக பழகக்கூடியவர் பன்னீர்செல்வம். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், மக்கள் மத்தியிலும், அ.தி.மு.க.தொண்டர்கள் மத்தியிலும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நல்ல பெயர் இருப்பதாலும் அவருக்கு எனது ஆதரவை தெரிவித்தேன்.

அதேபோல், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது தொகுதி மக்களின் விருப்பத்தை தெரிந்து அதற்கு ஏற்ப, சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். மக்கள் ஆதரவு இருப்பதால் முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பொறுப்பேற்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story