சிவகிரி அருகே பயங்கரம் ஆசிரியை கொடூரக் கொலை; கணவர் கைது


சிவகிரி அருகே பயங்கரம் ஆசிரியை கொடூரக் கொலை; கணவர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2017 4:30 AM IST (Updated: 14 Feb 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே பள்ளிக்கூட ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நடத்தையில் சந்தேகப்பட்டு இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகிரி,

ஆசிரியை

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விசுவநாதபேரி கிராமத்தில் சக்தி கிழக்கு- மேற்கு தெரு சந்திப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது 38). இவர் கல்லிடைக்குறிச்சி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.

சுரேஷ்குமாரின் மனைவி வீரலட்சுமி (34). அவரது சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே மேட்டுப்பட்டி மாரியம்மன் நகர் ஆகும். இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சண்முகபிரியா (8) என்ற மகளும், கோபி (5) என்ற மகனும் உள்ளனர். வீரலட்சுமி, சிவகிரியில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். சுரேஷ்குமார் கல்லிடைக்குறிச்சியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார்.

நடத்தையில் சந்தேகம்

விடுமுறை நாட்களில் மட்டும் சுரேஷ்குமார், சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சுரேஷ்குமார், தன்னுடைய மனைவி வீரலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அவர் கூறியதாகவும், அதற்கு வீரலட்சுமி சம்மதிக்காததால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுரேஷ்குமார் ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கணவன்-மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

கொடூரக் கொலை

ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார், சிரட்டையில் இருந்து தேங்காய் எடுக்க பயன்படுத்தும் தேங்காய் கீறி கம்பியால் தன்னுடைய மனைவியின் கழுத்தில் 3 முறை பலமாக குத்தியுள்ளார்.

இதனால் ரத்தம் பீறிட்டு கொட்டியதில் வீரலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே வீரலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அங்கு அவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கணவர் கைது

இதுகுறித்து உடனடியாக சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீசுவரி, சப்- இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

கொலை செய்யப்பட்ட வீரலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

சுரேஷ்குமார் கடந்த 1998-ம் ஆண்டு ராணுவ பயிற்சியில் சேர்ந்து விட்டு இடையில் நின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடத்தையில் சந்தேகப்பட்டு ஆசிரியையை, அவருடைய கணவரே கொடூரமாக கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story