நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே ‘திடீர்’ தீ விபத்து ரெயில்கள் தாமதம்


நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே ‘திடீர்’ தீ விபத்து ரெயில்கள் தாமதம்
x
தினத்தந்தி 14 Feb 2017 3:45 AM IST (Updated: 14 Feb 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ரெயில் நிலையம் அருகே ‘திடீர்’ தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ரெயில்கள் தாமதமாக வந்து சென்றன.

நாகர்கோவில்,

‘திடீர்’ தீ

நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள், செடி-கொடிகள் மற்றும் புதர்கள் ஏராளமாக உள்ளன. இவைகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் காய்ந்த இந்த புதர்களில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ ‘மளமள’வென பரவியது.

இதன் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் தீப்பற்றி எரிந்த பகுதிக்குள் தண்ணீர் நிரப்பப்பட்ட தீயணைப்பு வாகனத்தை கொண்டு செல்ல இயலவில்லை.

அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் முக கவசம் அணிந்துகொண்டு மரக்கிளைகளை வைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் நிறுத்தம்-பரபரப்பு

அப்போது தண்டவாளம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. அந்த நேரத்தில் மும்பையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் வந்துகொண்டு இருந்தது. தண்டவாளத்தை புகை முற்றிலுமாக மறைத்திருந்ததால், ரெயில் நிலையத்துக்குள் மும்பை எக்ஸ்பிரஸ், செல்லாமல் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் ரெயில் அங்கேயே நின்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீயணைப்பு பணியில் சுமார் 2 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் ரெயில் தண்டவாளத்தை சூழ்ந்திருந்த புகை மண்டலம் மறைந்தது.

அதன் பிறகு மும்பை எக்ஸ்பிரஸ், ரெயில் நிலையத்துக்குள் வந்தது. இந்த ரெயில் வழக்கமாக 11.50 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வரும். தீ விபத்து காரணமாக நேற்று இந்த ரெயில் 30 நிமிடம் தாமதமாக வந்தது.

இதுபோல் நாகர்கோவிலில் இருந்து கோட்டயம் செல்லும் ரெயிலும் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தண்டவாளங்களை, ரெயில் தண்டவாளம் பராமரிப்பு உதவி என்ஜினீயர் பிமீலா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story