7–வது சம்பளக் கமி‌ஷன் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி சாராய ஆலை தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்


7–வது சம்பளக் கமி‌ஷன் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி சாராய ஆலை தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Feb 2017 4:00 AM IST (Updated: 14 Feb 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

7–வது சம்பளக் கமி‌ஷன் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி வடிசாராய ஆலை தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வில்லியனூர்,

7–வது சம்பளக் கமி‌ஷன் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி வடிசாராய ஆலை தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சாராய உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது.

வடிசாராய ஆலை

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே ஆரியபாளையம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான வடிசாராய ஆலை உள்ளது. இங்கு சுமார் 200 பேர் பணியாற்றி வருகிறார்கள். இங்கிருந்துதான் புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாராயக் கடைகளுக்கு விற்பனைக்காக சாராயம் அனுப்பப்பட்டு வருகிறது.

இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள், 7–வது சம்பளக் கமி‌ஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

திடீர் வேலைநிறுத்தம்

இந்தநிலையில் நேற்று காலை இந்த கோரிக்கைக்காக வடிசாராய ஆலை தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சாராய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையொட்டி சாராயக்கடைகளுக்கு சாராயம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் வழக்கம் போல் சாராய ஆலைக்கு வந்த வியாபாரிகள், அவர்களாகவே சாராய பாட்டில்களை தங்கள் வாகனங்களில் ஏற்றிச் செல்ல முயன்றனர். ஆனால் தொழிலாளர்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தடுத்தனர். அதனால் அங்கு இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை எழுந்தது.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன், வடிசாராய ஆலை சேர்மன் விஜயவேணி எம்.எல்.ஏ. மற்றும் சாராய ஆலை நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதை ஏற்று வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் கைவிட்டனர். வழக்கம்போல் சாராயக் கடைகளுக்கு சாராயம் அனுப்பி வைத்தனர். ஆனால் புதிதாக சாராய உற்பத்தியில் ஈடுபட மறுத்துவிட்டனர். அதன் காரணமாக சாராய உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தொழிலாளர்களுடன் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் எந்த முடிவும் ஏற்படவில்லை.


Next Story