விஜய் நந்தாவின் குடோனில் இருந்து மொகலாயர்கள் கால மரத்தூண்கள் பறிமுதல்


விஜய் நந்தாவின் குடோனில் இருந்து மொகலாயர்கள் கால மரத்தூண்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Feb 2017 3:51 AM IST (Updated: 14 Feb 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

விஜய் நந்தாவின் குடோனில் இருந்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மொகலாயர்கள் காலத்து மரத்தூண்களை பறிமுதல்.

மும்பை.

சிலை கடத்தலில் ஈடுபட்டு வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொழில் அதிபர் விஜய் நந்தாவின் குடோனில் இருந்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மொகலாயர்கள் காலத்து மரத்தூண்களை பறிமுதல் செய்தனர்.

சிலை கடத்தல்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொழில்அதிபர் விஜய்நந்தாவின் மும்பையில் உள்ள வீடு, குடோனில் சமீபத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீடு மற்றும் குடோனில் இருந்து பழங்காலத்து சாமி சிலைகள், கலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து விஜய் நந்தா கைது செய்யப்பட்டார்.

விஜய் நந்தா தென்னிந்திய கோவில்களில் திருடப்பட்ட சிலைகள், இந்திய பழங்கால கலைப்பொருட்களை வெளிநாட்டிற்கு கடத்தி ஏலத்தில் விட்டு சம்பாதித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

மரத்தூண்கள் பறிமுதல்

இந்தநிலையில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மீண்டும் விஜய் நந்தாவிற்கு சொந்தமாக பைகுல்லாவில் உள்ள ரகசிய குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்து சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த, கலைநயமிக்க 12 மரத்தூண்கள் உள்ளிட்ட கலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் பறவைகள், பூக்களை போன்ற சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இருந்த 12 மர அலங்கார வளைவுகள், 12 மர பீடங்கள் ஆகியவையும் அடங்கும்.

‘ பறிமுதல் செய்யப்பட்ட மரத்தூண்கள் 17, 18-ம் நூற்றாண்டை சேர்ந்த மொகலாய மன்னர்கள் பயன்படுத்தியது போல தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பேக்கிங் செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு கடத்த தயார் நிலையில் இருந்தது ’ என வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார். 

Next Story