100 நாட்கள் பணி முடித்தவர்களுக்கு கூடுதலாக 50 நாள் வேலை கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 நாட்கள் பணி முடித்தவர்களுக்கு மேலும் 50 நாட்கள் வேலை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– வேலை உற
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 நாட்கள் பணி முடித்தவர்களுக்கு மேலும் 50 நாட்கள் வேலை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வேலை உறுதி திட்டம்வேலூர் மாவட்டத்தில் கடந்த 2008–ம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரகப்பகுதிகளில் உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள 18 வயதிற்கு மேல் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்களுக்கு குறையாமல் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் அடிப்படை வளத்தை உருவாக்குதல், சமூக பங்களிப்பை உறுதி செய்ய திறம்பட செயலாற்றுதல், நிலையான சொத்துக்களை உருவாக்குதல் ஆகிய ஊராட்சி அமைப்பு முறையை வலுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
கூடுதலாக 50 நாட்கள் வேலைஇந்த நிலையில் பருவமழை பொய்த்ததனால் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக மத்திய அரசு இந்த ஆண்டு 100 நாட்களுக்கு பதில் 150 நாட்களாக உயர்த்தி கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க அனுமதியளித்துள்ளது. இதனை பயன்படுத்தி ஏற்கனவே 100 நாட்கள் பணிமுடித்த குடும்பங்கள் மார்ச் மாதத்திற்குள் கூடுதலாக 50 நாட்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.203 ஊதியம் வழங்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சம அளவிலான ஊதியம் வழங்கப்படும். மூன்றில் ஒரு பங்கு பயனாளிகள் பெண்களாக இருக்க வேண்டும். மத்திய அரசு நெறிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்ட புதிய குட்டைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள குட்டை, குளம், ஊரணி, கோவில் குளங்கள் போன்ற நீர்வளம் ஆதாரங்களை புனரமைத்தல், நீர்வரத்து கால்வாயை தூர்வாருதல், பாசன குளங்களை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், புதிய மண்சாலைகளை அமைத்தல், நீர்வள, மண்வள பாதுகாப்பு பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளுதல், வறட்சியினை தடுக்கும் வகையில் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், சிறு,குறு விவசாயிகள் நிலச்சீர்திருத்த திட்டப்பணிகள், பாரத பிரதமர் குடியிருப்பு திட்ட பயனாளிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆகியோரின் நிலங்களில் பாசன வசதிகளை ஏற்படுத்துதல், மரக்கன்றுகளை நடுதல், நில மேம்பாட்டு பணிகள் மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே இந்த ஆண்டு கூடுதலாக 50 நாட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி கொள்ளவும். 100 நாட்கள் பணி முடித்தவர்கள் உடனடியாக ஊராட்சி நிர்வாகத்தை அணுகி கூடுதல் நாட்கள் பணியாற்றலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.