ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே தகராறு
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது நிதியில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள பணிகள் மேற்கொள்வதற்காக டெண்டர் விடுவதற்கான மனுக்கள் செலுத்த தி.மு.க.வை சேர்ந்த கே.டி.ராஜேந்திரன், பாலாஜி, செல்வகணபதி உள்பட பலர் வந்தனர். அப்போது அ.தி.மு.க. சார்பில் முன்னாள் ம
ஆரணி,
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது நிதியில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள பணிகள் மேற்கொள்வதற்காக டெண்டர் விடுவதற்கான மனுக்கள் செலுத்த தி.மு.க.வை சேர்ந்த கே.டி.ராஜேந்திரன், பாலாஜி, செல்வகணபதி உள்பட பலர் வந்தனர்.
அப்போது அ.தி.மு.க. சார்பில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பி.சுப்பிரமணி என்பவர் தி.மு.க.வில் உள்ள உங்களுக்கு டெண்டர் விடுவதற்காக பணம் செலுத்தும் விண்ணப்பத்தை கொடுக்க முடியாது என்று பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் கூச்சலிட்டு அ.தி.மு.க.வினரிடம் தகராறு செய்தனர். உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொ.சுப்பிரமணி, பரணிதரன் ஆகியோர் வந்து சமரசம் செய்தும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்ததும் விரைந்து வந்த ஆரணி நகர போலீசார் இருதரப்பினரும் டெண்டர் போடுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுங்கள், பிறகு பணிகள் குறித்து முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.