தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது;–
தூத்துக்குடி,
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது;–
150 நாட்கள்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராம பஞ்சாயத்துக்களில் பதிவு செய்துள்ள நபர்களுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
வறட்சி மாநிலமாக தமிழ்நாடு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்து உள்ள அனைத்து நபர்களுக்கும் கூடுதலாக 50 நாட்கள் பணி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பணிகள்எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்கள் பணியை முடித்து உள்ள நபர்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே 100 நாட்கள் வேலை முடித்த நபர்கள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர், நில மேம்பாட்டு பணிகள், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல், வரத்துக்கால்வாய்களில் முட்செடிகளை அகற்றி ஆழப்படுத்துதல், சிறு, குறு விவசாயிகளின் நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் மற்றும் பழ மரக்கன்றுகள் நடுதல் போன்ற வறட்சியை போக்கும் பணிகள், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை அடுத்த மாதம் (மார்ச்) 31–ந்தேதி வரை 50 நாட்கள் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.