சுரண்டை அருகே 3 வீடுகளில் கதவு உடைப்பு; 44 பவுன் நகைகள்–பணம் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை
சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் ஒரே நேரத்தில் 3 வீடுகளில் கதவு உடைக்கப்பட்டன. 44 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுரண்டை,
சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் ஒரே நேரத்தில் 3 வீடுகளில் கதவு உடைக்கப்பட்டன. 44 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல் வியாபாரிநெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூர் சர்ச் தெருவில் வசித்து வருபவர் துரைராஜ் (வயது 68). நெல் வியாபாரி. இவருக்கு அதே பகுதியில் 2 வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவில் துரைராஜ் தனது குடும்பத்தினருடன் ஒரு வீட்டில் தூங்கினார். பின்னர் நேற்று காலை அப்பகுதியில் மற்றொரு வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகளையும், ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
அரிசி வியாபாரிஇதே போல் துரைராஜ் வீட்டின் பின்புறம் வசித்து வரும் அரிசி வியாபாரியான அருளானந்தம் (73) வீட்டின் பின்புற கதவும் உடைக்கப்பட்டு இருந்தன. பீரோவில் இருந்த 36 பவுன் நகைகளையும், ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (42). இவர் டாஸ்மாக் மதுக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் நேற்று முன்தினம் இரவில் தனது குடும்பத்தினருடன் தூங்கினார். அப்போது அவரது வீட்டின் கதவையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். நகை–பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள், மாரியப்பனின் சட்டைப்பையில் இருந்த 150 ரூபாயை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.
மோப்ப நாய் சோதனைஇதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசில் துரை£ஜ், அருளானந்தம் ஆகிய இருவரும் தனித்தனியே புகார் செய்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு, சுரண்டை இன்ஸ்பெக்டர் பெருமாள், சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வி, அழகுமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது. மோப்ப நாய் அங்கிருந்து மோப்பம் பிடித்து பல்வேறு தெருக்களுக்கு ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, தடயங்களை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். ஒரே நேரத்தில் 3 வீடுகளில் கதவு உடைக்கப்பட்டு நகை–பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.