நெல்லை அருகே என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
நெல்லை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை வாங்க மறுத்து முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை,
நெல்லை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை வாங்க மறுத்து முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
என்ஜினீயரிங் கல்லூரி மாணவிநெல்லை மாவட்டம் கடையநல்லூர் மங்களாபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகள் மகாதேவி (வயது 18). இவர் நெல்லை அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில் இவருடைய அக்காள் மற்றும் தம்பியும் படித்து வருகின்றனர்.
மகாதேவி நேற்று முன்தினம் மாலையில் கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முற்றுகை போராட்டம்இந்த நிலையில் மாணவியின் உடலை வாங்க மறுத்து நேற்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் மாணவியின் உறவினர்கள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பினர் மாவட்ட செயலாளர் வண்ணை முருகன் தலைமையில் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாணவியை அவதூறாக பேசிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.