ராமேசுவரத்தில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும்


ராமேசுவரத்தில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும்
x
தினத்தந்தி 15 Feb 2017 3:00 AM IST (Updated: 15 Feb 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் காதலர் தினத்தை எதிர்த்து நாயிக்கு திருமணமும், ஆதரவாக காதல் ஜோடியினர் இனிப்பு வழங்கியும் வித்தியாசமாக கொண்டாடினர்.

எதிர்ப்பு

நாடு முழுவதும் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் பல்வேறு விதமாக நிகழ்ச்சியை உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில் ராமேசுவரத்தில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் என்.எஸ்.கே.வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் விசுவ இந்து பரி‌ஷத் சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஒரு நாய்க்கு மாலை அணிவித்து மலர்களை தூவி காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காதலர் தினத்தை தடை செய்ய வலியுறுத்தியும், காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். இதுதவிர காதலர் தின வாழ்த்து அட்டைகளை தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இந்த நூதன ஆர்ப்பாட்டத்தை பலர் பார்த்து சென்றனர்.

ஆதரவு

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடினர். தபால் அலுவலகம் எதிரே உள்ள கட்சி அலுவலகம் முன்பாக ஏற்கனவே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை அழைத்து நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். மேலும் தம்பதியர் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி கொண்டனர்.

இதில் அப்பகுதியை சேர்ந்த 4 காதல் தம்பதியினர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் செந்தில்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story