வாடிப்பட்டி பேரூராட்சியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்
சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்த வருவதாகவும், தனியார் இடங்களில் வளரும் சீமைக்கருவேல மரங்கள் அகற்ற வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி பேரூராட்சியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்த வருவதாகவும், தனியார் இடங்களில் வளரும் சீமைக்கருவேல மரங்கள் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
போர்கால அடிப்படையில்வாடிப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள 18 வார்டுகளிலும் இயற்கை வளத்தை சீரழிக்கும் விதத்தில் விளை நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்கி, செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தி வரும் இந்த சீமைக்கருவேலமரங்கள் அரசு மற்றும் தனிநபர் பட்டா இடங்களில் ஏராளமாக வளர்ந்து உள்ளன.
இதில் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் வேரோடு தீவிரமாக அகற்றப்பட்டு வருகின்றன. அதேபோல தனிநபர்களுக்கு சொந்தமான பட்டா இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேலமரங்களை, இடத்தின் உரிமையாளர்கள் போர்கால அடிப்படையில் அகற்றவேண்டும். தவறும் பட்சத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டு அதற்குரிய செலவு தொகையினை மதுரை கிளை உயர்நீதிமன்ற உத்தரவின்படி உரிமையாளர்களிடம் இருந்து இருமடங்குகளாக வசூலிக்கப்படும்.
அறிவிப்பு போர்டுகள்எனவே பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தங்களது இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேலமரங்களை உடனே அகற்றிடவேண்டும் என்று வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா இடஉரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியிருந்தார். அதைத்தொடர்ந்து தனிநபர்கள் தங்களது இடங்களில் சீமைகருவேலமரங்களை வேரோடு அகற்றி வருகின்றனர்.
மேலும் இது சம்மந்தமாக வாடிப்பட்டி பஸ்நிலையம், நீதிமன்றம், போடிநாயக்கன்பட்டி தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி பகுதிகளில் அறிவிப்பு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.