பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தொண்டை வலியுடன் காய்ச்சல் இருந்தால் அலட்சியம் காட்டாமல் முறையான சிகிச்சை பெறவேண்டும் என்றும் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறினார்.
கோவை,
பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தொண்டை வலியுடன் காய்ச்சல் இருந்தால் அலட்சியம் காட்டாமல் முறையான சிகிச்சை பெறவேண்டும் என்றும் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறினார்.பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவ–மாணவிகள் திரளான அளவில் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:–
தமிழக அரசின் சுகாதாரத்துறை சீரிய முறையில் செயல்பட்டு வருவதன் காரணமாக பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நோயின் தாக்கத்தைப்பற்றி அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் சுற்றியிருக்கும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதுடன் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்வதும் அவசியமாகும். கொசுக்கள் உற்பத்தியாகாமல் மற்றும் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க கைகளை சுத்தமாக கழுவவேண்டும்.
தொண்டை வலியுடன் காய்ச்சல் இருந்தால்அதை அலட்சியமாக விட்டு விடக்கூடாது. இதுபோன்ற முதல்கட்ட பாதிப்புகள் வரும்போது, தானாகவே மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி முறையான சிகிச்சைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவில் மருந்துகள் இருப்பில் உள்ளது.
மருத்துவ ஆலோசனைக்கு 104 எண்இதற்கென மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 104–ஐ தொடர்புகொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம்.தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசிகள் பிறந்த 9 மாத குழந்தைகள் முதல் 15 வயதுள்ள குழந்தைகள்வரை அனைவருக்கும் இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி முகாம் வருகிற 28–ந் தேதி வரை நடைபெறும். இந்த தடுப்பூசி தொடர்பாக அனைத்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தாமாகவே முன்வந்து தம்குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுக்கொள்கிறார்கள். பெரியம்மை, போலியோ போன்ற நோய்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டதைப்போல் தட்டம்மை, ரூபெல்லா ஆகிய நோய்கள் தடுப்பூசிகள் மூலம் முழுமையாக ஒழிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:–
பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் சாவுகோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 3 பேர் பலியாகி உள்ளனர். மற்றநோய்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டவர்களும் உள்ளனர். இவர்களுடைய இறப்புக்கு பன்றிக்காய்ச்சல் காரணம் கிடையாது. மற்ற நோய்களின் தீவிரத்தன்மையால் இறந்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் நோயை கண்டறியும் பரிசோதனை பிரிவு உள்ளது. தேவையான அளவு மாத்திரைகள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து ஆகியவை உள்ளன. தனியார் மருத்துவமனையினர் கேட்டாலும் மருந்துகளை இலவசமாக கொடுக்குமாறு கோவை அரசு ஆஸ்பத்திரி டீனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலை கண்டறிய தனியார் பரிசோதனை மையங்கள் உள்பட 21 பரிசோதனை மையங்கள் உள்ளன. ரூபெல்லா தடுப்பூசி தமிழ்நாடு முழுவதும் மாணவ–மாணவிகளுக்கு இதுவரை 43 லட்சம்பேருக்கு போடப்பட்டுள்ளது. தேவையான அளவு விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளதால் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள மாணவ–மாணவிகளை பெற்றோர் அழைத்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பிரேம்குமார், துணை இயக்குனர் டாக்டர் பானுமதி, மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.