நாளை நடைபெறும் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்: கட்சி கூட்டத்தில் தீர்மானம்
கடலூரில் நாளை நடைபெறும் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று நெய்வேலியில் நடந்த கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர் வடக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் நெய்வேலியில் உள்ள பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் சமட்டியார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மணிவாசாம், செல்வா, கோதண்டராமன், நகர செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராஜசேகரமுதலியார் வரவேற்றார். இதில் மாநில துணைபொது செயலாளர் பழதாமரைக்கண்ணன், துணைதலைவர் முத்து வைத்திலிங்கம், நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் திலகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்கூட்டத்தில் நாளை(வியாழக்கிழமை) மாலை கடலூர் டவுன் ஹாலில் நடைபெறும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதில் கடலூர் வடக்கு மாவட்டத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும், பழகுனர்(அப்ரண்டிஸ்) பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், பன்னீர்செல்வம், முரளி, செல்வகுமார், வெற்றிவேல், பிரேம்குமார், முத்துக்குமார் மற்றும் செந்தாமரைக்கண்ணன், பாட்டாளி தொழிற்சங்க பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சின்னசெல்வம், நகர தலைவர் முதனை முத்துக்குமார், மாவட்ட துணைதலைவர் முருகவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியன், நகர தலைவர் மோகன்தாஸ், முன்னாள் தொகுதி செயலாளர் உதயராசு, நகர இளைஞரணி செயலாளர் கவுதமன், ஒன்றிய மாணவர் அணி தலைவர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நெய்வேலி நரக செயலாளர்(தெற்கு) கார்த்திக் நன்றி கூறினார்.