மனைவி கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை


மனைவி கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 15 Feb 2017 4:30 AM IST (Updated: 15 Feb 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே மனைவி கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி,

தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜிஞ்சுப்பள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி உஷா (39). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வெங்கடேசன் பிறகு, கடந்த 2006-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் வெங்கடேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் வெங்கடேசன், அவரது மனைவி உஷா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி கணவன்-மனைவி 2 பேரும் தங்களது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

ஆயுள் தண்டனை

இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தனது மனைவி உஷாவை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த உஷா இறந்தார். இந்த கொலை குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், மனைவியை கொன்ற குற்றத்திற்காக வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார்.


Next Story