விக்கிரவாண்டி அருகே பெண் கொலை வழக்கில் கணவர் கைது


விக்கிரவாண்டி அருகே பெண் கொலை வழக்கில் கணவர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2017 3:00 AM IST (Updated: 15 Feb 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே பெண்ணை அடித்துக் கொலை செய்த வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

பெண் கொலை

விக்கிரவாண்டி அருகே உள்ள விஸ்வரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 37), லாரி டிரைவர். இவருடைய மனைவி சத்யா(33). நடத்தையில் சந்தேகப்பட்டு சத்யாவை ரமேஷ் அடித்து துன்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் சத்யா பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், குடும்ப பிரச்சினையில் சத்யாவை அவரது கணவர் ரமேஷ் அடித்துக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

கணவர் கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரமேசை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்வதற்காக நின்றுகொண்டிருந்த ரமேசை போலீசார் கைதுசெய்தனர். பின்னர் அவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் ரமேஷ் கூறியிருப்பதாவது:–

கடந்த 10–ந் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு சென்றேன். அங்கு மனைவி சத்யாவிடம் உணவு தருமாறு கேட்டேன். அதற்கு அவர், உணவு எதுவும் தயார் செய்யவில்லை எனக்கூறினார். இதனால் எனக்கும், அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் நானே உணவு தயார் செய்ய தொடங்கினேன். அப்போதும் சத்யா என்னிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், அருகில் கிடந்த இரும்புக்குழாயை எடுத்து மனைவி என்றுகூட பாராமல் சத்யாவை சரமாரியாக தாக்கினேன். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்திலேயே இறந்தார். உடனே சத்யாவை பாயில் படுக்க வைத்து அவர் மீது போர்வையை போர்த்தினேன். பின்னர் கதவை வெளிப்புறமாக பூட்டுப்போட்டு பூட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன். போலீசார் என்னை தேடுவதை அறிந்த நான், வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்றபோது என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


Next Story