வங்கிகளில் பணம் செலுத்த புதிய கட்டுப்பாடு வாடிக்கையாளர்கள் பரிதவிப்பு


வங்கிகளில் பணம் செலுத்த புதிய கட்டுப்பாடு வாடிக்கையாளர்கள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2017 3:30 AM IST (Updated: 15 Feb 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் செலுத்த அதிகாரிகள் புதிய கட்டுபாடு விதிப்பதால் வாடிக்கையாளர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

புதிய கட்டுப்பாடு

மானாமதுரையில் 10–க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளில் மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இதுதவிர அரசு ஊழியர்கள் பலரும் இந்த வங்கிகள் மூலமாகவே சம்பள பணத்தை எடுத்து வருகின்றனர். சம்பளம் தவிர மற்ற வங்கி பரிவர்த்தனைகளையும் இந்த வங்கிகள் மூலமாகவே செய்து வருகின்றனர். இதுதவிர பெரும்பாலான மாணவ–மாணவிகள் வெளியூர்களில் தங்கி உயர்கல்வி பயின்று வருகின்றனர். இவர்களின் செலவு உள்ளிட்ட விசயங்களுக்கு, பெற்றோர்கள் அவர்களது வங்கி கணக்குகளில் பணம் செலுத்துவது வாடிக்கை. இந்தநிலையில் மானாமதுரையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், மற்ற பகுதிகளில் உள்ள அதே வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பணம் செலுத்தினால் வாங்க மறுத்து புதிய கட்டுப்பாடு விதிக்கின்றனர். இதே வழிமுறையை வேறு சில வங்கிகளிலும் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள், அவர்களது பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் பணம் அனுப்ப முடியாமல் சிரமப்படுகின்றனர்.

ஆன்லைன் பரிவர்த்தனை

இதுகுறித்து மானாமதுரை பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் கூறியதாவது:– எனது மகன் சென்னையில் தங்கி படித்து வருகிறான். அங்குள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கி பணப்பரிவர்த்தனை செய்து வருகிறான். வழக்கமாக அவரது வங்கி கணக்கில் மானாமதுரை கிளையில் இருந்து பணம் செலுத்துவேன். தற்போது வங்கி ஊழியர்கள் பணத்தை வாங்க மறுக்கின்றனர். தங்கள் கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு, ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்புகள் என்று அறிவுறுத்துகின்றனர். எனக்கு ஆன்லைன் பரிவர்த்தனை எவ்வாறு செய்வது என்பது தெரியாது. எனது செல்போனில் அந்த வசதியும் இல்லை. வெவ்வேறு வங்கிகள் என்றால் கூட பரவாயில்லை. ஒரே வங்கி கணக்கில் பணத்தை வாங்க மறுப்பது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. எனவே வங்கி அதிகாரிகள் இதில் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story