பெரம்பலூரில் அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை நடக்கிறது


பெரம்பலூரில் அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 15 Feb 2017 3:45 AM IST (Updated: 15 Feb 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் அரசு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை நடைபெற உள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை (வியாழக்கிழமை) பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகள விளையாட்டில் 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளும் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்படுகிறது. மேலும் இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து ஆகிய போட்டிகள் இருபாலருக்கும், கால்பந்து போட்டி ஆண்களுக்கு மட்டும் நடத்தப் படுகிறது.

தகுதி

இந்த போட்டிகளில் கலந்து கொள்ள அரசு துறைகளில் முழுநேரமாக பணிபுரியும் அரசு அலுவலர்கள், பயிற்றுனர்கள், காவல்துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்கள், விளையாட்டு அலுவலர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உடற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோர் தகுதியுடையவர் ஆவர். காவல் துறை, தீயணைப்பு துறையில் பணியாற்றும் சீருடைப்பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்க இயலாது.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மாநில போட்டிகளில் பங்கேற்க விளையாட்டு ஆணையத்தால் சீருடை வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் அரசு ஊழியர்கள் தங்களது துறை அலுவலகத் தலைவரிடம் உரிய அனுமதியுடன் கடிதம் பெற்று போட்டிகள் நடைபெறும் நாளான நாளை காலை 8.30 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கிற்கு வருகை தர வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story