மராட்டிய அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் சரத்பவார் பரபரப்பு பேட்டி
மராட்டிய அரசின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய அரசின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.
சரத்பவார் பேட்டிதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று மும்பையில் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மராட்டிய அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால், தேசியவாத காங்கிரஸ் பங்களிப்பு காரணியாக திகழும். சிவசேனா உடனான கூட்டணி முறிவுக்கு பாரதீய ஜனதா தான் காரணம். காவி கூட்டணி மும்பை மாநகராட்சி தேர்தலின்போது பிரச்சினைகளை சந்திக்கும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நான் கணித்தேன்.
விவசாயக்கடனை தள்ளுபடி செய்தால், அரசுக்கு 5 ஆண்டுகாலமும் ஆதரவு அளிக்கும் என்று உத்தவ் தாக்கரே கூறுகிறார். ஆகையால், அரசுக்கு சிவசேனா முழுநேரமும் ஆதரவு அளிக்குமா? என்று அப்போதே நான் சந்தேகப்பட்டேன். காவி கூட்டணி முறிவு அடைய பா.ஜனதா மத்திய தலைவர்கள் தான் காரணம். ஏனென்றால், கூட்டணியில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை.
பா.ஜனதாவால் முடியாதுஇப்போது, விவசாயக்கடன் தள்ளுபடி விவகாரத்தின் மீது அரசு முடிவு எடுக்க வேண்டும். அரசை விட்டு வெளியேற விரும்பாத காரணத்தால், இந்த பிரச்சினையை உத்தவ் தாக்கரே கிளப்பியிருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளாக மும்பையில் முதலிடத்தில் இருக்கும் சிவசேனாவின் இடத்தை பா.ஜனதாவால் பிடிக்க முடியாது.
இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.