பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி தொழில் அதிபர்கள்– ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் நூதன கொள்ளை; 4 பேர் கைது
பெங்களூருவில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாக கூறி தொழில் அதிபர்கள்– ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் நூதன முறையில் கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாக கூறி தொழில் அதிபர்கள்– ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் நூதன முறையில் கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து புதிய 500, 2,000 நோட்டுகள் உள்பட ரூ.26.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
4 பேர் கைதுபெங்களூருவில் தொழில்அதிபர், ரியல்எஸ்டேட் அதிபர்களை ஏமாற்றி மிரட்டி கொள்ளையடித்து வந்த 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் பெங்களூரு மாருதி நகரில் வசித்து வரும் ரமேஷ் (வயது 33), எச்.வி.ஆர். லே–அவுட்டில் வசித்து வரும் ரூபேஷ் (37), கமலா நகரில் வசித்து வரும் புட்டராஜூ (47), உல்லால் மெயின் ரோட்டில் வசித்து வரும் முத்துராயசெட்டி (42) என்பது தெரியவந்தது.
கைதானவர்களில், ரமேஷ் ராமநகர் மாவட்டத்தையும், மற்ற 3 பேர் மண்டியா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும், கைதான 4 பேரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எனக்கூறி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கமிஷன் அடிப்படையில்...மேலும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் சமீபத்தில் ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, பெங்களூருவில் பல்வேறு இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்காரர்கள் எனக்கூறி தொழில்அதிபர்கள், ரியல்எஸ்டேட் அதிபர்களிடம் மர்மநபர்கள் பணம் கொள்ளையடித்தனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன.
கைதாகி இருக்கும் 4 பேரும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் கமிஷன் அடிப்படையில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாக மாற்றி தருவதாக தொழில்அதிபர்கள், ரியல்எஸ்டேட் அதிபர்களிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய அவர்கள் பணம் கொடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ஒப்புக்கொண்டனர். பின்னர் தொழில்அதிபர்கள், ரியல்எஸ்டேட் அதிபர்களை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு பணத்துடன் வரவழைத்து, இவர்கள் அங்கு வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் எனக்கூறி அவர்களை ஏமாற்றி மிரட்டி பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ரூ.26.49 லட்சம் பறிமுதல்கைதானவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் மற்றும் ரூ.26 லட்சத்து 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.9 லட்சம் புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் ஆகும். மற்றவை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
இதுகுறித்து பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.