குழந்தை பிறந்த 2-வது நாளில் மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை


குழந்தை பிறந்த 2-வது நாளில் மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை
x
தினத்தந்தி 16 Feb 2017 2:31 AM IST (Updated: 16 Feb 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில், குழந்தை பிறந்த 2-வது நாளிலேயே மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை வழங்கி தட்சிண கன்னடா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மங்களூரு,

குடும்ப தகராறில், குழந்தை பிறந்த 2-வது நாளிலேயே மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை வழங்கி தட்சிண கன்னடா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

குடும்ப தகராறு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே மூடபித்ரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எடபதவு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்த்(வயது 33). தொழிலாளி. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த ஜெயந்தி (24) என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணம் ஆன சில நாட்களிலேயே ஜெயந்துக்கும், ஜெயந்திக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த ஜெயந்தி, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதற்கிடையே ஜெயந்தி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெயந்திக்கும் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி மூடபித்ரி அரசு ஆஸ்பத்திரியில் வைத்து அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குத்திக் கொலை

குழந்தை பிறந்தது குறித்து அறிந்த ஜெயந்த், குழந்தை பிறந்த 2-வது நாளான ஜூன் 20-ந்தேதி தனது மனைவி ஜெயந்தியை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்து உள்ளார். அப்போது அங்கு வைத்து ஜெயந்துக்கும், ஜெயந்திக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயந்த் அருகில் இருந்த கத்தியால் ஜெயந்தியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

இதில் வயிற்றில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த ஜெயந்தி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக செத்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த மூடபித்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயந்தை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் குடும்பத் தகராறில் குழந்தை பிறந்த 2-வது நாளிலேயே ஆஸ்பத்திரிக்கு சென்று மனைவியை ஜெயந்த் குத்திக்கொன்றது தெரியவந்தது.

ஆயுள்தண்டனை

இந்த கொலை தொடர்பாக தட்சிணகன்னடா மாவட்ட முதலாவது விரைவு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் நீதிபதி எம்.ஜோஷி தீர்ப்பு கூறினார்.

அதில், குடும்பத் தகராறில் மனைவியை கொன்ற குற்றத்திற்காக ஜெயந்துக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story