உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வரும் மு.க.ஸ்டாலின் பேச்சு


உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வரும் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 15 Feb 2017 11:30 PM GMT (Updated: 2017-02-16T02:34:56+05:30)

‘உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வரும்’ என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி

அ.தி.மு.க., தே.மு.தி.க., பாஜ.க. உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்த 2 ஆயிரத்து 500 பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து மாற்று கட்சியினரை வரவேற்றார். அப்போது அவர் பேசியதாவது:–

யார் ஆட்சி?

தமிழகத்தில் தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆட்சி அமைப்பதற்காக காபந்து அரசின் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கவர்னர் அழைப்பாரா? அல்லது எடப்பாடி பழனிச்சாமியை அழைப்பாரா? அல்லது யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்று சொல்லி தி.மு.க.வை ஆட்சி அமைக்க அழைக்கப் போகிறாரா? என்று நான் சொல்லவில்லை, பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள்.

தி.மு.க.வை பொறுத்தவரை என்றைக்கும் கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்க முயற்சித்தது கிடையாது. மக்களை சந்தித்து, மக்களிடத்திலே பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவை பெற்று அதன்பிறகு தான் ஆட்சிக்கு வருவது கலைஞர் தலைமையிலான தி.மு.க.

சட்டமன்ற தேர்தல் வரும்

இப்போது இறந்தவர் பற்றி விமர்சனம் செய்கிறோம் என்று தவறாக நினைத்து விடக்கூடாது. நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா தான். 2–வது குற்றவாளி சசிகலா. முதலாவது குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு மற்ற 3 பேரும் சொத்துகள் சம்பாதித்து கொடுத்துள்ளனர் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் முன்பு நீதிபதி குன்கா தீர்ப்பு அளித்த போது இதே ஓ.பன்னீர்செல்வம் என்ன சொன்னார் தெரியுமா? தி.மு.க. சதி செய்து விட்டது என்று சொன்னார். சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையாக வேண்டி அவர்கள் கோவில் கோவிலாக சென்று பூஜை செய்தனர். ஆனால் இப்போது தீர்ப்பு வந்தவுடன் இதே ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்தார் தெரியுமா? அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இப்போது பதவி சண்டை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாமெல்லாம் உள்ளாட்சி தேர்தல் வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக சட்டமன்ற தேர்தல் வந்து விடும் நிலை உள்ளது. எது வந்தாலும் சந்திக்க தி.மு,க. தயாராக உள்ளது. எனவே கட்சியில் சேர்ந்துள்ள அனைவரும் நாட்டை காப்பாற்ற, இனத்தை காப்பாற்ற, மொழியை காப்பாற்ற, நம் சந்ததியினரும் நலமுடன் வாழ தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள். இந்த அவல ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராக இருங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


Next Story