டைகர்ஹில் அணையின் நீர்மட்டம் 3 அடியாக குறைந்தது


டைகர்ஹில் அணையின் நீர்மட்டம் 3 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 16 Feb 2017 3:30 AM IST (Updated: 16 Feb 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் டைகர்ஹில் அணையின் நீர்மட்டம் 3 அடியாக குறைந்துள்ளது. இதனால் ஊட்டி நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

குடிநீர் இணைப்புகள்

ஊட்டி நகராட்சி மொத்தம் 36 வார்டுகளை கொண்டது. இதில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர ஆண்டு ஒன்றுக்கு சுமார் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகள் உள்ளன.

மேலும் நகராட்சி சார்பில் மொத்தம் 11 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 7 ஆயிரம் இணைப்புகளுக்கு பார்சன்ஸ்வேலி அணை மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களுக்கு டைகர்ஹில், மார்லிமந்து, தொட்டபெட்டா ஆகிய அணைகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மழை பெய்யவில்லை

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் வறண்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க வகையில் பார்சன்ஸ்வேலி அணை தவிர மற்ற அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது.

ஊட்டி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி அணையில் தற்போது 44.5 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. இதனால் இந்த அணையின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பகுதிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. மார்லிமந்து அணையில் 1½ அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரும் சேறும், சகதியுமாக காணப்படுவதால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

3 அடியாக குறைந்தது

39 அடி உயரமுள்ள டைகர்ஹில் அணையில் தற்போது 3 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் இந்த அணையின் தண்ணீர் வினியோகிக்கப்படும் ஓல்டு ஊட்டி, நொண்டிமேடு, சவுத்வீக், எச்.எம்.டி. உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உருவாகி இருக்கிறது.

மேலும் பார்சன்ஸ்வேலி அணை தண்ணீரை கொண்டு ஊட்டி நகரின் ஒரு சில பகுதிகளுக்கு குடிநீர் வழங்க முடியாது. 3–வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பார்சன்ஸ்வேலி அணை தண்ணீரை அனைத்து பகுதிகளுக்கும் வினியோகம் செய்யமுடியும்.

ஆனால் 3–வது குடிநீர் திட்டப்பணியை முடிக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஊட்டி நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள நகராட்சி நிர்வாகம் தயாராகி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


Next Story