ஒப்பந்தப்படி கூலி வழங்காததால் விசைத்தறியாளர்கள் தவிப்பு கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க முடிவு
ஒப்பந்தப்படி கூலி வழங்காததால் விசைத்தறியாளர்கள் தவித்து வருகின்றனர். அவர்கள், கலெக்டரை சந்தித்த மனு கொடுக்க முடிவு செய்து உள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில் தற்போது பாதிக்கு பாதிதான் உற்பத்தி செய்யும் விசைத்தறிகளாக உள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இந்த தறிகள் மூலம் நாள்ஒன்றுக்கு சுமார் 1 கோடியே 25 லட்சம் மீட்டர் காடா துணிகள் உற்பத்தியானது. தற்போது 50 லட்சம் மீட்டராக உற்பத்தி குறைந்து விட்டது.
இதில் சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத் தறிகள் உள்ளன. இதனால் மில் நகரான கோவைக்கும், பனியன் நகரான திருப்பூருக்கும் மையப்பகுதியில் உள்ள சோமனூர் விசைத்தறி நகரமாகவே அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பகுதிகளில் பெரும்பாலான நூல் மில்கள், சைசிங் மில்கள் ஜவுளி நிறுவனங்கள் என விசைத்தறி ஜவுளி தொழில் சார்ந்தே பிற தொழில்கள் அனைத்தும் உள்ளன.
இங்கு உற்பத்தியாகும் துணிகளில் 20 சதவீதம் ஈரோட்டுக்கும், மீதமுள்ள 80 சதவீதம் வடமாநிலங் களான அகமதாபாத் மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப் படுகிறது. அங்கு காடா துணிகள் சாயமேற்றப்பட்டு தரம் வாரியாக பிரிக்கப்பட்டு உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. விசைத்தறி தொழிலை நம்பி வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சோமனூர் பகுதிகளில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
குறைவான கூலிவிசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூல் பெற்று கூலியின் அடிப்படை யில் துணி நெய்து கொடுக்கின்றனர். இந்த நிலையில் கடந்த காலத்தில் மின்கட்டண உயர்வு பிரச்சினை 2012–ம் ஆண்டுக்கு பிறகு 40 சதவீதம் டீசல் விலை உயர்வு விசைத்தறிகளுக்கான உதிரிபாகங்கள் விலை 100 சதவீதம் உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் விசைத்தறி உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாகவும் அப்போதைய நிலையில் தொழிலையும், தொழில் சார்ந்தவர்களையும் காக்க கூலி உயர்வு அவசியம் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 2014–ம் ஆண்டு தொடக்கத்தில் 30 சதவீதம் கூலி உயர்வு தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இந்த கூலி உயர்வு தொடர்ந்து அமல்படுத்தப்பட வில்லை. இதனால் கடந்த ஆண்டு மீண்டும் விசைத்தறி உரிமையாளர்கள் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கலெக்டர், அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டது. ஆனால் அந்த கூலி உயர்வு நிரந்தரமாக வழங்கப்பட வில்லை என்பது விசைத்தறியாளர்களின் குமுறலாகவே உள்ளது. தற்போதைய நிலையில் ஒப்பந்தப்படி வழங்காமல், 30 சதவீதம், 35 சதவீதம், 40 சதவீதம் என கூலி குறைத்து வழங்கப்படுவதாக கூறுகின்றனர். நெசவு கூலி குறைக்கப்பட்டதால் சோமனூர் பகுதியில் நெசவுத்தொழிலை நம்பி இருப்பவர்கள் சோகத்தில் மிதக்கும் நிலை உள்ளது. எனவே ஒப்பந்தப்படி கூலி மீண்டும் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மீண்டும் வேலை நிறுத்த போராட்டம்இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பி.குமாரசாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
தொழில் மந்தநிலையை காரணம் காட்டி விசைத்தறியாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்தப்படி கூலியை வழங்காமல், குறைத்து வழங்குவது விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தையும், தொழிலையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால் விசைத்தறியாளர்கள் தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கலெக்டர், அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி 30 சதவீத கூலியை வழங்க முன்வரவேண்டும். தற்போது உற்பத்தியை குறைக்கும் வகையில் வாரத்தில் ஒருநாள் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
ஆகவே ஒப்பந்தப்படி கூலியை வழங்கவில்லை என்றால் நிரந்தரமாக விசைத்தறிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இது குறித்து வருகிற 20–ந்தேதி கோவை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். அதன் பின்னர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் விசைத்தறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.