மரக்காணம் அருகே கடலில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் சாவு
மரக்காணம் அருகே கடலில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் இறந்தனர். மேலும் ஒருவரின் கதி என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிகுமார் மகன் கவுதம் (வயது 21). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வந்தார்.
இவரும் இவருடைய நண்பர்களான அதே கல்லூரியில் படிக்கும் புதுச்சேரி காலாப்பட்டை சேர்ந்த பாலசுந்தர் (21), மதகடிப்பட்டு அஜய் (22) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாலை காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆதலம்பறைகோட்டை கடற்கரையில் நடந்த சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்றனர்.
அங்கு சினிமா படப்பிடிப்பை பார்த்துவிட்டு 3 பேரும் கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக 3 பேரும் கடலில் மூழ்கினார்கள். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் 3 பேரையும் கடல் அலை இழுத்துச்சென்றது.
என்ஜினீயரிங் மாணவர்கள் சாவுஇதுகுறித்த தகவல் அறிந்ததும் சூனாம்பேடு மற்றும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மாணவர்களையும் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரவு நேரம் ஆனதால் மீட்பு பணி கைவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை மரக்காணத்தை அடுத்த அழகன்குப்பம் கடற்கரையோரத்தில் கவுதமின் உடலும், மாலையில் கைப்பானிக்குப்பம் கடற்கரையோரத்தில் பாலசுந்தரின் உடலும் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் விரைந்து சென்று கவுதம், பாலசுந்தர் ஆகிய இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒருவரின் கதி என்ன?மேலும் அஜயை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. அவரின் கதி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு அவர் என்ன ஆனார் என படகு மூலம் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.