தா.பழூர் வண்ணானேரியை ஆக்கிரமித்துள்ள கோரைப்புற்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?


தா.பழூர் வண்ணானேரியை ஆக்கிரமித்துள்ள கோரைப்புற்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 16 Feb 2017 4:00 AM IST (Updated: 16 Feb 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் வண்ணானேரியை ஆக்கிரமித்துள்ள கோரைப்புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தா.பழூர்,

தா.பழூர் வண்ணானேரி

அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வண்ணானேரி, எமனேரி, கோரைபுள்ளி, ஆண்டேரி போன்ற பல்வேறு ஏரிகள் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் வண்ணானேரி தா.பழூர் மற்றும் சிந்தாமணி ஊராட்சிகளுக்கு மையப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்த ஏரியை தா.பழூர், சிந்தாமணி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குளிக்கவும் கால்நடைகளை குளிப்பாட்டவும் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சிந்தாமணி பகுதி மக்கள் விவசாய பாசனத்திற்கும் இந்த ஏரி நீரை பயன்படுத்துகிறார்கள்.

கோரைப்புற்கள்

இந்நிலையில் இந்த ஏரியானது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரிவர தூர்வாரப்படாமல் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதனால் இந்த ஏரியை கோரைப்புற்கள் மற்றும் முட்செடிகள் ஆக்கிரமித்து புதர் மண்டி கிடக்கிறது.

இதனால் மழைகாலத்தில் நீர்வரத்துக்கு தடை ஏற்பட்டு குறைவான நீரே ஏரியில் சேருகிறது. அந்த நீரையும் கோரைப்புற்கள் மற்றும் முட்செடிகள் உறிஞ்சி விடுகின்றன. இதனால் இந்த ஏரியை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காற்றில் பறக்கும் பஞ்சு

வண்ணானேரியில் கோரைப்புற்கள் வளர்ந்து பல ஆண்டுகள் ஆவதால், அவற்றின் விதைகள் வெடித்து மெல்லிய பஞ்சு காற்றில் பரவுகிறது. இது வாகன ஓட்டிகளின் கண்களில் படும் போது, அவர்கள் விபத்துகளில் சிக்க நேரிடுகிறது. மேலும் கண்களில் அரிப்பு, நீர் வடிதல், சுவாசகோளாறு போன்றவை ஏற்படுகின்றன. இதேபோல் அருகில் உள்ள பெட்டிகடைகள், ஓட்டல்களில் அந்த பஞ்சுகள் உணவு பொருட்களில் விழுகிறது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அதை அப்புறப்படுத்துவதற்கு வியாபாரிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

எனவே புதர் மண்டி கிடக்கும் வண்ணா னேரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் ஏரியின் ஓரப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மட்டும் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகின்றன. கோரைப்புற்களை அடியோடு அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட வில்லை. எனவே இந்த ஏரியில் உள்ள கோரைப்புற்களை அகற்றி, தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

Next Story