விபத்தில் இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 16 Feb 2017 4:15 AM IST (Updated: 16 Feb 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் பெரம்பலூரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

பெரம்பலூர்,

விவசாயி சாவு

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா சிலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 75). விவசாயி. கடந்த 30-8-2005 அன்று ஆண்டிமடத்தில் இருந்து சிலம்பூருக்கு அரசு பஸ்சில் கோவிந்தசாமி சென்று கொண்டிருந்தார். அப்போது சிலுவைச்சேரி கிராமம் நியூ காலனி பகுதியில் சென்றபோது டிரைவர் கவனக்குறைவாக செயல்பட்டதால் அந்த பஸ் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கோவிந்தசாமி மார்பு எலும்பு முறிந்து படுகாயம் அடைந்தார். விபத்தில் படுகாயமடைந்த கோவிந்தசாமி மற்றும் அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி கோவிந்தசாமியின் மனைவி சிவபாக்கியம், மகன்கள் கணேசன், ராமலிங்கம் உள்ளிட்டோர் சார்பில் கடந்த 27-9-2005-ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் கோவிந்தசாமி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதனால் கோவிந்தசாமி விபத்தில் இறந்ததற்கு அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு மாற்றப்பட்டது.

நீதிபதி உத்தரவு

மேலும் வழக்கின் நிலை கருதி அரியலூர் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது கோவிந்த சாமியின் குடும்பத்துக்கு கும்பகோணம் கோட்ட திருச்சி அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என 8-3-2011-ல் உத்தரவிட்டது. எனினும் இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டதால் கோவிந்தசாமியின் குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷீமாபானு, கோவிந்தசாமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பதால் பெரம்பலூருக்கு வரும் திருச்சி அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்றும், மேலும் வட்டியுடன் சேர்த்து கோவிந்தசாமியின் குடும்பத்துக்கு ரூ.95 ஆயிரத்து 712 வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பஸ் ஜப்தி

இந்த நிலையில், அரியலூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ் நேற்று காலை பெரம்பலூர் புது பஸ்நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. இதையறிந்த கோர்ட்டு ஊழியர்கள் உடனடியாக விரைந்து சென்று அந்த பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினர். மேலும் ஜப்தி செய்யப்பட்டதற்கான நோட்டீசும் அந்த பஸ்சில் ஒட்டப்பட்டது.

இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story