அரியலூர், ஜெயங்கொண்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்


அரியலூர், ஜெயங்கொண்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்
x
தினத்தந்தி 16 Feb 2017 4:15 AM IST (Updated: 16 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர், ஜெயங்கொண்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தாமரைக்குளம்,

தடகள போட்டிகள்

2016-2017-ம் கல்வி ஆண்டில் உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உடல் திறன் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இதில் 8 முதல் 10 மதிப்பெண்கள் பெற்று தேர்வான மாணவ-மாணவிகளுக்கு அரியலூர் கல்வி மாவட்ட அளவிலான தரம் கண்டறிதல் தடகள போட்டிகள் நேற்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. போட்டியில் 27 நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து சுமார் 600 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் என பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன.

பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் கீதாஞ்சலி ரத்தினமாலா கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் இந்த மாத (பிப்ரவரி) இறுதியில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ள மண்டல அளவிலான உலக திறனாய்வு தடகள போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரகுநாதன் தெரிவித்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், வில்லாளன், தாரங்கபாணி, கலையரசி ஆகியோர் செய்திருந்தனர்.

ஜெயங்கொண்டத்தில்...

உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தொடங்கி வைத்தார். கல்வி மாவட்டத்தில் உள்ள 60 பள்ளிகளை சேர்ந்த 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் 560 மாணவ-மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் நடுவர்களாக பாண்டியன், ஆரோக்கியம், அசோக்குமார், நிர்மலாமேரி, அபுபக்கர் ஆகியோர் செயல்பட்டனர்.

அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வடவீக்கம் ஆர்.சி. பாத்திமா பள்ளியும், 2-ம் இடத்தை வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியும் பெற்றன. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட உடற்கல்வி அலுவலர் ரகுநாதன் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் கண்ணதாசன் வரவேற்றார். முடிவில் பொற்கொடி நன்றி கூறினார். 

Next Story