கமண்டலநதியின் குறுக்கே அனுமதியின்றி அமைக்கப்பட்ட தரைப்பாலம் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை


கமண்டலநதியின் குறுக்கே அனுமதியின்றி அமைக்கப்பட்ட தரைப்பாலம் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Feb 2017 4:30 AM IST (Updated: 16 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே கமண்டல நதியின் குறுக்கே அனுமதியின்றி அமைக்கப்பட்ட பாலத்தை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

கண்ணமங்கலம்,

அனுமதியின்றி பாலம்


கண்ணமங்கலத்தை அடுத்த வெள்ளூர் ஊராட்சியில் ஆழவாணை ஓடைப்பகுதி உள்ளது. இப்பகுதியில் 20–க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இங்கு சேட்டு, பாஸ்கரன் ஆகியோர் செங்கல் சூளை வைத்துள்ளனர். செங்கல் சூளைக்கு வாகனங்கள் செல்லவும், ஆழவாணை ஓடைப்பகுதிக்கு மக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக கமண்டலநதி ஆற்றின் குறுக்கே சிமெண்டு குழாய் அமைத்து அதன் மேல் மண் மற்றும் கல்லால் தரைப்பாலம் அமைத்து இருந்தனர்.

ஆற்றின் குறுக்கே அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தை அகற்ற வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 13–ந் தேதி நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் மனு அளித்தார்.

அகற்ற உத்தரவு


அதன்பேரில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கமண்டல நதியின் குறுக்கே அனுமதியின்றி கட்டுப்பட்டுள்ள தரைப்பாலத்தை அகற்ற உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் காளிபிரியன், பணி ஆய்வாளர் உமாபதி, பாசன உதவியாளர்கள் பிரபாகர், சந்தோஷ், சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன், மண்டல துணை தாசில்தார் முகமது அலி ஜின்னா, கிராம நிர்வாக அலுவலர் திருமால் ஆகியோர் தரைப்பாலத்தை அகற்ற சென்றனர். அதற்கு அழவாணை ஓடைப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி வந்தனர்.

இதையடுத்து சந்தவாசல் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை அடுத்து அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் மூலம் கமண்டலநதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் அகற்றினர்.


Next Story