பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு பட்டியல் கொடுத்தும் ஆட்சி அமைக்க அழைக்காததன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது


பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு பட்டியல் கொடுத்தும் ஆட்சி அமைக்க அழைக்காததன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது
x
தினத்தந்தி 16 Feb 2017 4:30 AM IST (Updated: 16 Feb 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பட்டியல் கொடுத்தபிறகும் ஆட்சியமைக்க கவர்னர் அழைக்காததன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறினார்.

வேலூர்,

நாஞ்சில் சம்பத் பேட்டி


சொத்துகுவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா உள்பட 4 பேருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று வேலூரில் நடந்த கல்லூரி விழாவில் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

மிகப்பெரிய சதி இருக்கிறது


கேள்வி: அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க கவர்னர் இன்னும் அழைக்காததற்கு என்ன காரணம்?.

பதில்: பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பட்டியலை கொடுத்தும் ஆட்சியமைக்க கவர்னர் அழைக்காததற்கான பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது.

கேள்வி: ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படப்போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியிருக்கிறாறே?.

பதில்: அவர்களை காலம் நிராகரிக்கும்.

பெருமைப்படுகிறேன்


கேள்வி: அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டுள்ளது பற்றி?

பதில்: பொதுச் செயலாளரின் பணிச்சுமைகளை பகிர்ந்துகொள்ள தகுதியான நபர் தேவை. அதற்கு டி.டி.வி. தினகரன் தகுதியானவர். அவர் பெரியகுளம் தொகுதி எம்.பி. யாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அ.தி.மு.க. அனைத்து தொண்டர்களுக்கும் அறிமுகமானவர். எனவே அவர் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு தகுதியானவர்.

கேள்வி: சமூக வலைத்தளங்களில் உங்களை பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறதே?

பதில்: விமர்சனம் செய்யக்கூடிய இடத்தில் நான் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

கேள்வி: அ.தி.மு.க. பொதுசெயலாளர் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது பற்றி?

பதில்: கோர்ட்டு தீர்ப்பை விமர்சனம் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.


Next Story