ஜல்லிக்கட்டு காளை மர்ம சாவு: போலீசார், வனத்துறையினர் விசாரணை
கள்ளந்திரி அருகே ஜல்லிக்கட்டு காளை மர்ம சாவு: போலீசார், வனத்துறையினர் விசாரணை
கள்ளந்திரி
மதுரையை அடுத்த கள்ளந்திரி அருகே உள்ளது பொய்கைக்கரைப்பட்டி. இங்குள்ள தெப்பக்குளத்தின் வடக்கு பக்கமுள்ள அழகர்மலை அடிவாரப் பகுதியில் ஒரு ஜல்லிக்கட்டு காளை இறந்து கிடப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து பொய்கைக்கரைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாலஜெயந்தி அப்பன்திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குமாரி உள்ளிட்ட போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்த ஜல்லிக்கட்டு காளையின் உடம்பில் பல இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் காளையின் அடையாளங்களை கொண்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இறந்த காளை யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. அதைத்தொடர்ந்து போலீசார், மாவட்ட கால்நடை மருத்துவ குழுவினரை வரவழைத்து சம்பவ இடத்திலேயே காளையின் உடலை பரிசோதனை நடத்தி அருகில் இருந்த இடத்தில் புதைத்தனர். மேலும் மர்மமான முறையில் இறந்து கிடந்த காளை சுமார் 8 வயது உடையது என்றும், அதன் உடம்பில் பல இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்ததால், காட்டுமாடுகள் தாக்கியதா? அல்லது காளையை கொன்று மர்ம நபர்கள் இங்கு வந்து வீசிவிட்டு சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.