போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மோசடி: மாநகராட்சி அதிகாரிகள், காண்டிராக்டர்கள் மீது வழக்கு
போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 கோடி மோசடி செய்த மாநகராட்சி அதிகாரிகள், காண்டிராக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த காண்டிராக்டர் ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடக்கழிவுகளை அள்ளியது, அரசு கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடித்தது போன்ற வேலைகளை செய்ததாக கடந்த 2010–11–ம் நிதி ஆண்டில் ஆவணங்கள் தயாரித்து ரூ.1,07,93,100–ஐ மாநகராட்சி அதிகாரிகளும், காண்டிராக்டர்களும் சேர்ந்து பொதுமக்களின் வரிப்பணத்தை மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக 26.9.2015 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த புகாரை விசாரித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்தகாரர்கள் மீது வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
கமிஷனர் அறிக்கைஇந்த மனு நீதிபதி ஏ.எம்.பஷீர்அகமது முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனரின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:–
மனுதாரரின் புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதில், மதுரை மாநகராட்சியின் 5, 6, 11, 16, 17, 18, 20 உள்ளிட்ட சில வார்டுகளில் கட்டிட கழிவுகளை அகற்றியதாகவும், கட்டிங்களுக்கு பெயிண்ட் அடித்தது என்பன போன்ற பணிகளை நிறைவேற்றியதாக கணக்கு காட்டி, நடக்காத இந்த பணிகளை செய்ததாக கூறி ரூ.1,07,93,100–க்கான பற்றுச்சீட்டுகளை (வவுச்சர்கள்) மாநகராட்சி அதிகாரிகள் தயாரித்து உள்ளனர். அவற்றை மாநகராட்சி லைசென்சு பெற்ற காண்டிராக்டர்களான ஏ.சுரேஷ்பாபு, எம்.முத்து, வி.சின்னத்தம்பி, எம்.தர்மர், ஆர்.சரவணன், ரமேஷ், ராமகிருஷ்ணன், ஜெயராம் ஆகியோரது பெயரில் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கண்ட முறைகேட்டில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகளின் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல மாநகராட்சி அங்கீகாரம் பெற்ற காண்டிராக்டர்கள் பட்டியலில் இருந்த மேற்கண்ட காண்டிராக்டர்கள் 8 பேரின் மாநகராட்சி லைசென்சு நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மோசடி செய்த தொகையில் ரூ.97,95,511–ஐ மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை காண்டிராக்டர்களின் டெபாசிட்டில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது
வழக்குபதிவு செய்ய உத்தரவுஇதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
மாநகராட்சி அதிகாரிகளும், காண்டிராக்டர்களும் சேர்ந்து செய்த மோசடிக்கான ஆவணங்களையும், ஆதாரங்களையும் சேகரிக்க மனுதாரர் மிகுந்த சிரத்தை எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், காண்டிராக்டர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதும் அவர்கள் செய்த குற்றச்செயல்களுக்காக கோர்ட்டு மூலமும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காண்டிராக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.