கலெக்டர் கார் முன்பு அமர்ந்து பெண் தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் கார் முன்பு அமர்ந்து பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 16 Feb 2017 4:15 AM IST (Updated: 16 Feb 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு பெண் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்

மதுரை ஆனையூர் இமயம் நகர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி மாரீஸ்வரி (வயது 36). நேற்று காலையில் இவர், மனவளர்ச்சி குன்றிய தனது மகனுடன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் கையில் மண்எண்ணெய் கேன்வைத்து இருந்தார். அலுவலக வளாகத்தில் கலெக்டரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. திடீர் என்று அவர் கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தீக்குளிக்க முயன்றார்.

அதைபார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து விசாரித்தனர். அப்போது மாரீஸ்வரி மனு ஒன்றை கலெக்டாரிடம் கொடுக்க வேண்டும் என்றார். போலீசார் அவரை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். அங்கு கலெக்டர் வீரராகவராவிடம் மனுவை கொடுத்தார்.

அரசு வேலை

மனுவில், “மதிச்சியம் ஆசாரித்தோப்பை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் எங்கள் பகுதிக்கு வந்து என்னையும், எனக்கு தெரிந்த நாகலட்சுமியையும் சந்தித்தார். தான் அரசியல் செல்வாக்கு மிக்கவர். அமைச்சர்கள், அதிகாரிகளை தெரியும் என்று சொன்னார். அரசு துறையில் வேலைவாங்கி தருவதாகவும் ஆசைவார்த்தை கூறினார். அதை நம்பி நானும், நாகலட்சுமியும் 5½ லட்சம் ரூபாயை நாகேந்திரபாண்டியனிடம் கொடுத்தோம். ஆனால் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றிவந்தார். பணத்தை திரும்ப கேட்டதற்கு இரண்டு காசோலைகள் கொடுத்தார். அந்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லை என திரும்பவந்து விட்டது. எனவே நாகேந்திரன் மீது தக்க நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற உதவிட வேண்டும்“ என குறிப்பிட்டு இருந்தார்.

மனுவைபெற்றுக்கொண்ட கலெக்டர் போலீசாரிடம் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். கலெக்டர் கார்முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story