சினிமா பெண் நடன கலைஞர் வீட்டில் நகை, பணம் திருட்டு


சினிமா பெண் நடன கலைஞர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 Feb 2017 3:28 AM IST (Updated: 16 Feb 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

சினிமா பெண் நடன கலைஞர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருட்டு

பூந்தமல்லி,

போரூர் அருகே சினிமா பெண் நடன கலைஞர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

துணை நடன கலைஞர்

போரூரை அடுத்த அய்யப்பன் தாங்கல், மாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திவ்யா(வயது 24). இவர், சினிமாவில் நடனக்குழுவில் துணை நடன கலைஞராக உள்ளார். இவருடைய கணவர் கோபி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

திவ்யா மட்டும் இந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 10-ந் தேதி திவ்யா, வீட்டை பூட்டி விட்டு ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள தனது பெற்றோரை பார்க்கச் சென்று விட்டார். நேற்று காலை தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.

நகை-பணம் திருட்டு

அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் தரையில் சிதறிக்கிடந்தது.

பீரோவில் சோதனை செய்த போது அதில் வைத்து இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருப்பது தெரிந்தது. திவ்யா, ஆந்திர மாநிலம் சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின்பேரில் போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story