பிவண்டியில் பயங்கரம் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொலை மர்மகும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


பிவண்டியில் பயங்கரம் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொலை மர்மகும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Feb 2017 4:15 AM IST (Updated: 16 Feb 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

பிவண்டியில் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். காங்கிரஸ் கவுன்சிலர் தானே மாவட்டம் பிவண்டி– நிஜாம்பூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தவர் மனோஜ் மாத்ரே (வயது40). கட்டுமா

மும்பை,

பிவண்டியில் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

காங்கிரஸ் கவுன்சிலர்

தானே மாவட்டம் பிவண்டி– நிஜாம்பூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தவர் மனோஜ் மாத்ரே (வயது40). கட்டுமான அதிபராகவும் விளங்கிய அவர், பிவண்டி ஓஸ்வால் வாடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் வெளியில் சென்றுவிட்டு இரவு 9.30 மணியளவில் அவர் காரில் வீடு திரும்பினார்.

காரில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, மர்மகும்பல் ஒன்று மனோஜ் மாத்ரே நோக்கி கையில் கத்திகளுடன் ஆவேசமாக ஓடிவந்தனர்.

சுட்டுக்கொலை

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோஜ் மாத்ரே விபரீதத்தை உணர்ந்து தப்பிக்க முயற்சி செய்வதற்குள் அந்த கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியது. மேலும் அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் மனோஜ் மாத்ரேயை துப்பாக்கியால் சுட்டான். இதில், இரண்டு குண்டுகள் அவரது உடலை துளைத்தன. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றது.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மனோஜ் மாத்ரேவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தானேயில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ் மாத்ரே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நார்போலி போலீசார் விரைந்து வந்து மனோஜ் மாத்ரேயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் குவிப்பு

கவுன்சிலர் மனோஜ் மாத்ரே சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்ததும் ஓஸ்வால் வாடியில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் இருப்பதற்காக பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

மனோஜ் மாத்ரே பிவண்டியின் கால்வா பகுதியை சேர்ந்தவர். அங்கு சிலருடன் அவருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் அங்கிருந்து காலி செய்துவிட்டு ஓஸ்வால் வாடி பகுதியில் குடியேறி இருக்கிறார். இதற்கு முன்னரும் அவரை கொலை செய்ய சதி நடந்து இருக்கிறது. அதில் இருந்து தப்பித்து இருக்கிறார்.

கொலையாளிகளுக்கு வலைவீச்சு

தற்போது மனோஜ் மாத்ரேயை சுட்டுக்கொன்ற கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. அரசியல் முன்விரோதம் காரணமாக அவர் தீர்த்து கட்டப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பிவண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story