மரக்காணம் அருகே புதுவை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி பலி


மரக்காணம் அருகே புதுவை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 16 Feb 2017 3:52 AM IST (Updated: 16 Feb 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

கடலில் குளித்த புதுவை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். இதில் ஒரு மாணவரின் உடல் கரை ஒதுங்கியது.

மரக்காணம்

கடலில் குளித்த புதுவை

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். இதில் ஒரு மாணவரின் உடல் கரை ஒதுங்கியது. மற்ற 2 மாணவர்கள் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை. அலையில் சிக்கிய மாணவர்கள் புதுவை ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் கவுதம்(வயது21). மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். இவரும் இவரது கல்லூரி நண்பர்களான காலப்பட்டு பாலச்சந்தர், மதகடிப்பட்டு அஜய் ஆகியோரும் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த ஆலம்பரைகோட்டையில் நடந்த சினிமா படப்பிடிப்பை பார்க்க நேற்று முன்தினம் சென்றனர். பின்னர் அங்கு அவர்கள் கடலில் குளித்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் 3 பேரும் சிக்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு கடற்கரை ஓரமாக நின்றவர்கள் கடலுக்குள் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் கவுதம், பாலச்சந்தர், அஜய் ஆகிய 3 பேரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச்சென்றது. உடல் கரை ஒதுங்கியது

இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட கவுதம் உள்பட 3 பேரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள அழகன்குப்பம் கடற்கரையில் நேற்று காலை கவுதம் உடல் கரை ஒதுங்கியது.

இதைபார்த்த பொதுமக்கள் மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்–இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் அங்கு சென்று, கவுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட அஜய், பாலச்சந்தர் ஆகியோர் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை. தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story