புதுவை மாநில பட்ஜெட் ஏப்ரல் மாதம் தாக்கல் நாராயணசாமி தகவல்


புதுவை மாநில பட்ஜெட் ஏப்ரல் மாதம் தாக்கல் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2017 3:52 AM IST (Updated: 16 Feb 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தின் பட்ஜெட் வருகிற ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– வறட்சி நிவாரணம் புதுவைக்கு வறட்சி நிவாரணம்

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தின் பட்ஜெட் வருகிற ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வறட்சி நிவாரணம்

புதுவைக்கு வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி பிரதமர், உள்துறை மந்திரி, வேளாண்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். காரைக்கால் பகுதியில் முழுமையாக வறட்சி பாதித்துள்ளது. அங்கு விவசாய நிலங்கள் எல்லாம் தரிசாக கிடக்கின்றன. புதுவையிலும் மழை பொய்த்ததால் விளைச்சல் குறைந்துள்ளது.

வறட்சி காரணமாக புதுவை, காரைக்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுள்ளேன். மத்திய அரசின் குழுவினை அனுப்பி பார்வையிடவும் வலியுறுத்தி உள்ளேன். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மத்திய வேளாண் துறை மந்திரி உறுதி அளித்துள்ளார்.

ரூ.100 கோடி

நாளை டெல்லி சென்று உடனடியாக குழுவை அனுப்புமாறு வேளாண்துறை மந்திரியிடம் நேரில் வலியுறுத்துவேன். மேலும் அமைச்சரவை தீர்மானம், சட்டமன்ற தீர்மானத்தையும் கொடுத்து வறட்சி நிவாரணமாக ரூ.100 கோடி வழங்க வலியுறுத்துவேன். இடைக்கால நிவாரணம் தரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுவை மக்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசின் நிறுவனத்திடம் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் அவர்களால் போதுமான அரிசியை சப்ளை செய்ய முடியவில்லை. இடைத்தேர்தல் வந்ததாலும் அரிசி வழங்குவது தடைபட்டது. தற்போது புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை தனித்தனியாக பிரித்து அரிசி கொள்முதல் செய்து வழங்க தொடங்கியுள்ளோம்.

ஏப்ரலில் பட்ஜெட்

நீட் தேர்வுக்கு விலக்கு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி ஆகியவை தொடர்பாக புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். அதேபோல் விரைவில் விமான போக்குவரத்தையும் தொடங்க உள்ளோம். புதுவையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு விமானம் இயக்க கேட்டுள்ளோம்.

புதுவை மாநில பட்ஜெட் வருகிற ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்படும். அதற்கு முன்பு சட்டமன்றத்தை கூட்டி சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இடைக்கால பட்ஜெட்

வழக்கமாக நிதியாண்டு என்பது மார்ச் 31–ந்தேதிக்குள் முடிந்துவிடும். ஆனால் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ஏப்ரல் மாதம்தான் தாக்கல் செய்யப்படும் என்பதால் அடுத்த ஒருசில மாதங்களுக்கு அரசின் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு (இடைக்கால பட்ஜெட்) மார்ச் மாதத்தில் சட்டசபை கூட்டப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story