தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் கரம்பை மண் எடுக்க அனுமதி பெற சிறப்பு முகாம் வருகிற 23–ந் தேதி நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில், விவசாயிகள் கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 23–ந் தேதி நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில், விவசாயிகள் கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 23–ந் தேதி நடக்கிறது.
குறைதீர்க்கும் நாள்தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ராசய்யா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முத்துஎழில், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வறட்சி நிவாரணம்கூட்டத்தில் கலெக்டர் ரவிகுமார் பேசும் போது, மாவட்டத்தில் கடந்த ஆண்டு 68 சதவீதம் மழை குறைவாக பெய்து உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 62 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 18.3 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. மாவட்டம் முழுவதும் வறட்சியால் 1 லட்சத்து 79 ஆயிரத்து 954 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. இந்த அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
வங்கி கணக்குகளில்...வறட்சி நிவாரணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகையால் வருவாய்த்துறை மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் 11 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கு விவரம் தெரிவிக்காமல் உள்ளனர். விவசாயிகள் 6 மாதங்களாக தங்கள் வங்கி கணக்கில் பணபரிவர்த்தனை செய்யாமல் இருந்தால், அந்த வங்கி கணக்கு செயல்படாத கணக்காக மாறி இருக்கும். அது போன்ற வங்கி கணக்குகளில் விவசாயிகள் பணபரிவர்த்தனை செய்து செயல்பாட்டில் வைக்க வேண்டும்.
சிறப்பு முகாம்மாவட்டத்தில், ரூ.1 கோடியே 48 லட்சம் செலவில் 8 இடங்களில் உலர் தீவன விற்பனை மையம் அமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில், 1 லட்சத்து 22 ஆயரத்து 491 விவசாயிகள், தங்களது 1 லட்சத்து 31 ஆயிரத்து 84 எக்டர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து உள்ளனர். இதற்காக ரூ.9 கோடியே 5 லட்சம் பிரீமியம் தொகை செலுத்தி உள்ளனர்.
மேலும் விவசாயிகள் கரம்பை மண் அள்ளுவதற்காக 318 கண்மாய்கள் அடையாளம் காணப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்து உள்ளன. இதனால் வருகிற 23–ந் தேதி அனைத்து தாலுகா அலுவலகத்திலும், அந்தந்த தாசில்தார் தலைமையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் கரம்பை மண் தேவைப்படும் விவசாயிகள் கலந்து கொண்டு உடனடியாக அனுமதி பெறலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்று கூறினார்.
கடன் தள்ளுபடிதொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, பெருங்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் 53 பேருக்கு கடன் தள்ளுபடி செய்ய உத்தரவு வந்து உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் மோசடியாக கடன் பெற்று உள்ளனர். அதே நேரத்தில் உண்மையான விவசாயிகள் வாங்கிய நகைக் கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் நகை ஏலம் விடப்படும் என்று கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து நோட்டீசு அனுப்பி உள்ளனர். ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நோட்டீசு அனுப்பி இருப்பதால் மேலும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் நகை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.
கலெக்டருக்கு இனிப்புசீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும். அதே நேரத்தில் தனியார் நிலத்தில் உள்ள மரங்களை விவசாயிகள் அகற்றுவதற்து போதுமான பணம் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஆகையால் அதற்கு உரிய அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறினர்.
மேலும் உடன்குடி பகுதியில் சுற்றுப்புற சூழல் மாசுபடும் வகையில் செயல்பட்டு வந்ததாக மீன் அரவை ஆலை மூடப்பட்டது. இதற்கு உடன்குடி பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் தீபக்ஜேக்கப், தியாகராஜன் மற்றும் விவசாயிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.