சீமை கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் வைகோ பேச்சு
சீமை கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
கோவில்பட்டி,
சீமை கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
வைகோ பேச்சுகோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:–
கோவில்பட்டியில் அடுத்த மாதம் (மார்ச்) 8–ந்தேதி ம.தி.மு.க. சார்பில் மகளிர் மாநாடு நடக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
‘தினத்தந்தி’ தலையங்கம்கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு ‘தினத்தந்தி‘ தலையங்கத்தில் சீமை கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் பற்றி எழுதி இருந்தனர். இதனை வாசித்தவுடன் மதுரை ஐகோர்ட்டு கிளையில், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று மனுதாக்கல் செய்தேன். தற்போது ஐகோர்ட்டு கிளை உத்தரவின்பேரில், தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சீமை கருவேல மரங்கள் கோடைக்காலத்திலும் செழித்து வளரும். ஏனெனில் இதன் வேர்கள் நிலத்தடி நீரையும், இதன் இலைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் கூட உறிஞ்சக் கூடியவை. இதனால்தான் கிராமங்களில் கருவேல மரங்களின் நிழலில் கால்நடைகளை கட்டி வைக்க மாட்டார்கள். சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதை ‘தினத்தந்தி‘ முன்னெடுத்து செல்கிறது.
இளைஞர்களுக்கு அழைப்புஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றுபட்டு சீமை கருவேல மரங்களை அகற்ற முன்வர வேண்டும். வசதி உள்ளவர்கள் பொக்லைன் இயந்திரங்களை வழங்கி சீமை கருவேல மரங்களை அகற்ற உதவ வேண்டும். தினமும் காலை, மாலையிலும், விடுமுறை நாட்களிலும் சீமை கருவேல மரங்களை அனைவரும் அகற்ற வேண்டும். இதனால் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது.
மதுவை ஒழிக்க...
தமிழகத்தில் இருந்து ஆற்று மணலை கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு கடத்தி செல்வதை தடுக்க வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும். மதுவுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுத்து நிறுத்த வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, கோவில்பட்டியில் 3 மேம்பாலங்கள் அமைக்கவும், 68 ஆயிரம் பேருக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போடவும், 25 ஆயிரம் ஊனமுற்றவர்களுக்கு உபகரணங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்தேன்.
முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட 8 ஆண்டுகளாக போராடினேன். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்தினேன். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை வடமாநில நிறுவனத்துக்கு தாரை வார்க்க முயன்றதை தடுத்து நிறுத்தி, அதனை லாபகரமாக இயக்க ஏற்பாடு செய்தேன், என்று பேசினார்.
இந்த விழாவில், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் சிவகுமார், மாநில கலைத்துறை துணை செயலாளர் பொன் ஸ்ரீராம், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் சரவணன், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வக்கீல் அழகுசுந்தரம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் நிஜாம், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சிப்பிபாறை ரவிச்சந்திரன், கல்லத்தியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.