தேவனஹள்ளி அருகே விமான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் அமைகிறது மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே தகவல்
தேவனஹள்ளி அருகே விமான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் அமைவதாக மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.
பெங்களுரு,
தேவனஹள்ளி அருகே விமான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் அமைவதாக மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.
20 நிறுவனங்கள் முதலீடுகர்நாடக தொழில் துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற்று வரும் விமான தொழில் கண்காட்சியை நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
உலகில் பாரீஸ், லண்டன் ஆகிய நகரங்களில் நடைபெறும் விமான தொழில் கண்காட்சிக்கு அடுத்த இடத்தில் பெங்களூருவில் நடைபெறும் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. ஏராளமான விமான உற்பத்தி நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்துள்ளன. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சுமார் 20 நிறுவனங்கள் முதலீடுகளை செய்துள்ளன.
உதிரி பாகங்கள் உற்பத்திதேவனஹள்ளி அருகே 45 ஏக்கர் பரப்பளவில் விமான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் அமைகிறது. இதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க மத்திய அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கர்நாடகத்தில் விமானத்துறை மற்றும் ராணுவத்தில் அதிக முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
கர்நாடக அரசு அறிவித்துள்ள தொழில் கொள்கை, தொழில் முதலீடுகளின் தோழனை போல் இருக்கிறது. அமெரிக்கா, ரஷியா போன்ற பல்வேறு நாடுகள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளன. ஏர்பஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் கர்நாடகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
இவ்வாறு தேஷ்பாண்டே கூறினார்.