ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய எண்ணை வாங்கி தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் "அபேஸ்"
மைசூரு டவுனில் வங்கி மேலாளர் போல் செல்போனில் பேசி ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணை வாங்கி தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்மநபர் “அபேஸ்“ செய்துவிட்டார்.
மைசூரு,
மைசூரு டவுனில் வங்கி மேலாளர் போல் செல்போனில் பேசி ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணை வாங்கி தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்மநபர் “அபேஸ்“ செய்துவிட்டார். அந்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வங்கி மேலாளர் போல் பேசி...மைசூரு டவுன் வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோகுலம் நகரை சேர்ந்தவர் அரேகவுடா. தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரேகவுடா, தனது செல்போனை வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்று உள்ளார். அப்போது அரேகவுடாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்து உள்ளது. அந்த செல்போன் அழைப்பை அரேகவுடாவின் மகள் எடுத்து பேசி உள்ளார்.
அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர், நான் உங்கள் தந்தை வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மேலாளர் பேசுகிறேன் என்றும், அவரின் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகப் போகிறது. இதனால் அவரது வங்கிக்கணக்கு எண்ணையும், ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணையும் கொடுத்தால், நான் புதிய ஏ.டி.எம். கார்டு வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.
குறுஞ்செய்திஅந்த மர்மநபர் கூறியதை உண்மை என்று நம்பிய அரேகவுடாவின் மகளும், தனது தந்தையின் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணை கொடுத்து உள்ளார். இதுகுறித்து அரேகவுடாவிடமும் அவரது மகள் கூறியுள்ளார். ஆனால் அதனை அரேகவுடா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அரேகவுடாவின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரேகவுடா, தான் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று பணம் எடுக்கப்பட்டது பற்றியும், தனது செல்போனில் வங்கி மேலாளர் பேசியது பற்றியும் கேட்டு உள்ளார். அப்போது வங்கி மேலாளர், நான் உங்களது செல்போனுக்கு போன் செய்து பேசவில்லை என்று கூறியுள்ளார்.
ரூ.50 ஆயிரம் “அபேஸ்“அப்போது தான் தனது மகளிடம் வங்கி மேலாளர் பேசிய மர்மநபர், வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய எண் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு ரூ.50 ஆயிரத்தை “அபேஸ்“ செய்தது அரேகவுடாவுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அரேகவுடா வி.வி.புரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி மேலாளர் போல் செல்போனில் பேசி பணத்தை ‘அபேஸ்‘ செய்த மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.