கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை ஊழியர் வீட்டில் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை ஊழியர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை ஊழியர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
ஊழியர்
விருதுநகர் மாவட்டம் பலவாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 29). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் கணேஷ்குமாருக்கும் கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தை சேர்ந்த காயத்ரிக்கும் (25) திருமணம் நடந்தது. தற்போது மனைவி காயத்ரியுடன் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையையொட்டி கோரிமேடு பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் கணேஷ்குமார் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற ஜெபகூட்டத்திற்கு சென்று விட்டார்.
வீட்டின் பூட்டு உடைப்பு
இவரது பக்கத்து வீட்டில் தங்கியிருந்தவர்கள் அருண்குமார்(24), கனகராஜ்(29). தனியார் தொழிற்சாலை ஊழியர்கள். நேற்று அதிகாலை 5 மணியளவில் அருண்குமார், கனகராஜ் இருவரும் கதவை திறக்க முயன்றனர். அப்போது கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து அவர்கள் அதே வீட்டின் மாடியில் வசித்து வந்த வீட்டு உரிமையாளர் சசிகலாவுக்கு (45) தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர்.
அவர் கீழே இறங்கி வந்து வெளிப்புறமாக போடப்பட்டிருந்த தாழ்ப்பாளை திறந்து விட்டார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கணேஷ்குமாரின் வீட்டுக்கான பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
திருட்டு
இது குறித்து கணேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கணேஷ்குமாரும், அவரது மனைவி காயத்ரியும் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தனர். வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் மதிப்பு உள்ள எல்.இ.டி டி.வி. போன்றவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆட்டோவில் சிலர் திரிந்தது தெரியவந்தது. 5-க்கும் மேற்பட்டோர் திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Next Story