ரூ.8.37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்


ரூ.8.37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
x
தினத்தந்தி 17 Feb 2017 4:15 AM IST (Updated: 17 Feb 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே உள்ள ஏ.கே.சமுத்திரம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.8 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல்,

மனுநீதிநாள் முகாம்


புதுச்சத்திரம் அருகே உள்ள ஏ.கே.சமுத்திரம் ஏ.கே.சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி நாள் முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நாமக்கல் மாவட்டத்தை வருகிற மார்ச் மாதம் 31–ந் தேதிக்குள் திறந்தவெளியில் அசுத்தம் செய்யப்படாத மாவட்டமாக உருவாக்கி தூய்மையான, சுகாதாரம் மிக்க மாவட்டமாக மாற்றிட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக கழிப்பிட வசதிகள் இல்லாத இல்லங்களுக்கு அரசு மானியத்தொகை ரூ.12 ஆயிரத்தில் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டித் தரப்படுகின்றன. திறந்த வெளியில் அசுத்தம் செய்வதால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் அனைவரும் திறந்த வெளியில் அசுத்தம் செய்வதை முற்றிலும் தவிர்த்து ஆரோக்கியமான வாழ்விற்கும் சுகாதாரமான வாழ்க்கைக்கும் முன்னுரிமை கொடுத்திட வேண்டும்.

குடிநீர் சிக்கனம்


கிராமப்புறங்களில் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிடவும், அனைத்து மக்களுக்கும் குடிநீர் சீராக கிடைத்திடவும், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பருவமழை பொய்த்ததன் காரணமாக நீர்ஆதாரங்கள் குறைந்து விட்டதால், மக்களின் தேவைக்கேற்ப முழுமையாக நீர் வழங்குவதற்கு இயலாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம் நீர் எடுக்கப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. அத்தகைய குடிநீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்துவதோடு, இதர பயன்பாட்டிற்கு சாதாரண நீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்


தொடர்ந்து 152 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 37 ஆயிரத்து 100 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

இந்த மனுநீதி நாள் முகாமில் நாமக்கல் உதவி கலெக்டர் ராஜசேகரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) பாலச்சந்திரன், இணை இயக்குனர் (வேளாண்மை) கலியராஜ் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாமக்கல் தாசில்தார் சுகுமார் நன்றி கூறினார்.

Next Story